தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு,
இந்தியச் சமுகத்தின் ஒடுக்குமுறை பொருளியல் தளத்தில் மட்டுமின்றி சமுக தளத்திலும் வெளிப்படுவதாகும். இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் கவனமும், வினைகளும் இப் புரிதலோடு அமைய வேண்டுமென்பதை நமக்கு உணர்த்துகிற மண்தான் வெண்மணி. நெருப்பிற்கு இரையான அவ்வீரத்தியாகிகளுக்கு சி ஐ டி யு எழுப்பி வருகிற வெண்மணி நினைவாலயம் இச் செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லப்போகிறது. இந் நினைவாலய நிர்மாணத்திற்கு தமிழக இன்சூரன்ஸ் ஊழியர்களும் தங்களின் உணர்வு பூர்வமான பங்களிப்பாக ரூ 2 லட்சம் வழங்கியதை நெகிழ்வோடு நினைவு கூர்கிறேன்.
ஒடுக்குமுறையின் பன்முகங்களை நோக்கிய நமது எதிர்வினைகளை ஒருமுகப்படுத்தும்போதுதான் நம்முடைய போராட்டத்தின் விரிவும் முழுமை பெறும். இலக்குகளை நோக்கியும் முன்னேற இயலும். ஒரு புறம் தலித்-பெண்-சிறுபான்மையினரை மையமாகக் கொண்ட அடையாள அரசியல் அவர்களின் குமுறல்களுக்கு வடிகால் அமைக்கிற உத்தியோடு அவர்களை விரிந்த போராட்ட களத்திலிருந்து பிரித்து வைக்கிறது. மறு புறம் பொது நீரோட்டம் என்ற பெயரில் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பில் இருக்கிற வர்க்க உள்ளடக்கத்தை மறுதலிக்கிற ஊனமும் அரங்கேறுகிறது. பாலின சமத்துவம், சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு, சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றுக்கான போராட்டம் தொழிற்சங்க, வெகுஜன, முற்போக்கு அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமையை பெறும்போதுதான் உண்மையான ஒற்றுமையை, திரட்டலை உறுதி செய்ய முடியும். இதுவே தோழர் சீனிவாச ராவ் வெண்மணி மண்ணில் நிகழ்த்தி காட்டிய போராட்டம்.
இன்றைக்கு தமிழ் மண்ணில் CITU , AIIEA உள்ளிட்ட அமைப்புகள் உருவாக்கியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது இச் சிந்தனைக்கு அளிக்கப்பட்டுள்ள செயல் வடிவமாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இம் முன்னணி 100 மையங்களுக்கும் மேலாக தனது நேரடித் தலையீடுகளைச் செய்திருக்கிறது. உத்தப்புரம், காங்கையனூர், செட்டிபுலம், பந்தபுளி ஆகிய போராட்டக் களங்கள் அனைத்தையும் முன்னின்று நடத்திய அமைப்பு. கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் தீண்டாமை நிலவுகிறது என்பதை அம்பலப்படுத்தி கோவை பெரியார் நகர் தடுப்புச் சுவரை தகர்த்தெறியச் செய்த அமைப்பும் இதுவாகும். சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பின் அடையாளங்களாக திகழ்கிற அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிற அமைப்பாகவும் இது வளர்ந்துள்ளதென பலரும் பாராட்டுகிறார்கள்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சமுக நீதி, சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பில் 1980 களில் இருந்தே மிகச் சரியான நிலையினை எடுத்து வந்துள்ள அமைப்பாகும். 1980 களின் துவக்கத்தில் குஜராத்தில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு முழு அடைப்பு நடைபெற்ற போது அதை மறுதலித்து தனது உறுப்பினர்களை அலுவலகத்திற்கு போகச் சொன்ன அமைப்பாகும் AIIEA . அதற்காக இச் சங்கத்தின் தலைவர்கள் அலுவலக வாயில்களிலேயே தாக்கப்பட்டு காயத்திற்கு ஆளாகினர் என்பது வரலாறு. 1985 ல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு இந்தூரில் (மத்திய பிரதேசம்) நடைபெற்றபோது தோழர் சுனில் மித்ரா ( சங்கத்தின் இணைச் செயலாளராகவும் , பின்னாளில் CPI (M ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமாக இருந்த முது பெரும் தலைவர்) குஜராத்தில் காயம்பட்டவர்களை பாராட்டிவிட்டு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான சங்கத்தின் நிலையை தெளிவாக அறிவித்தார். பல நடுத்தர வர்க்க அமைப்புகள் ஒற்றுமை என்ற பெயரில் மௌனம் சாதித்த சூழலையும்,
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மிகப் பெரும் வன்முறை தூண்டிவிடப் பட்ட காலத்தையும் இணைத்து இன்று சிந்தித்தால்தான் AIIEA வின் கொள்கை உறுதியை நம்மால் உணர இயலும்.
தமிழகத்திலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் குறிப்பிடத்தக்க பணியை ஆற்றி வருகிறது.
* மேலவளவு தலித் பஞ்சாயத்துத் தலைவர் திரு.முருகேசன் படுகொலை செய்யப்பட்டபோது அக் கிராமத்திற்கு சென்று தலித் மக்களுக்கு நிவாரணம்.
* மதுரை மந்திகுளம் கருவானூரில் தலித் குடிசைகள் தீக்கிரை ஆக்கப்பட்டபோது உடனடியாக சென்று நிவாரணம்.
* தூத்துக்குடி மாவட்டம் நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக சங்கத் தலைமை ஆற்றிய குறிப்பிடத் தக்க பணி.
* மதுரை மாவட்டக் கள ஆய்வில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்தி உத்தபுரம் சுவர் உள்ளிட்ட தீண்டாமை வடிவங்களை அம்பலப்படுத்திய பணி. உத்தப்புரம் சுவருக்கு எதிரான இயக்கங்களில் 100 க்கும் மேலானவர்களை ஈடுபடுத்தியதும், வழக்கிற்க்கான ஆவணப் பணிகளில் முன்னின்று காவல் துறைத் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்ததுமான செயல்பாடுகள்.
* தமிழகம் முழுமையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிப் பணிகளில் திரளான உறுப்பினர்களை பங்கேற்கச் செய்தல். சென்னை, மதுரை நகரக் கள ஆய்வுகளில் நிறைய பேரை ஈடுபடச் செய்தது. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சங்கத்தின் சார்பிலேயே விரிவான கள ஆய்வினை நடத்தியது.
* கோயம்பத்தூரில் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தை உருவாக்கி தொடர்ச்சியாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தமிழக அரசுப் பணி குரூப் 2 தேர்வு. ஆங்கில உரையாடல் ஆகியவற்றுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நம்முடைய இப் பணிகள் எல்லாம் பட்டியலுக்காக தொகுக்கப்படவில்லை. இதில் சில விடுபட்டிருக்கலாம். அவையும் பெரிய விசயம் அல்ல. காரணம், நாம் செய்ய வேண்டியதும், செல்லவேண்டியதும் நிறைய உள்ளன. அந்த இடைவெளியே நம் கவனத்திற்கும், கவலைக்கும் உரியது.
வெண்மணியில் எழும்புகிற நினைவாலயம் ஓர் வரலாற்றுச் சின்னம். வரலாற்றை அறியாத, உள்வாங்காத இயக்கத்திற்கு எதிர்காலம் இருக்க முடியாது. இலக்கும் கைவசப்படாது. சி ஐ டி யு உருவாக்குகிற இக் கம்பிரமான நினைவுச் சின்னம் தமிழக தொழிலாளர் வர்க்கத்தின் மீது காலம் சுமத்தியுள்ள வரலாற்றுக் கடமையை நினைவுபடுத்துவதாகும். ஆம் ! சாதியம் வேறு முகம் அல்ல. ஒடுக்குமுறையின் இன்னொரு முகம். இதனையும் எதிர்க்காமல் விடியல் இல்லை.
( சி ஐ டி யு வின் வெண்மணி நினைவாலய மலருக்கான கட்டுரை)
No comments:
Post a Comment