Monday, September 9, 2013

ஆயிரம் பகிர்வுகள்- அபார சாதனை



இணைய தளம்- ப்ளாக்- பேஸ் புக் போன்றவற்றை உழைப்பாளி மக்களின் இயக்கங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் பொதுவாக உள்ளது. வருந்துகிற அளவிற்கு முன்முயற்சிகள் இருப்பதில்லை என்பதும் நடுத்தர வர்க்கத்தின் பலவீனம். ஒரு சில விதிவிலக்குகள்தான் நம்பிக்கைகளை உயிர்ப்பிக்கின்றன. 

ஒருசிலர் இப்படி உள்ளே போகிறவர்களும் பொழுதுபோக்கு, விசாரிப்புகள், ஏதோ எழுதப்படாத ஒப்பந்தம் போல ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது என்று சுருங்கிப் போகிறார்கள். அரசியல்-சமுகம்-பண்பாடு சார்ந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை.

ஆனால் பிற்போக்காளர்கள் மிக நேர்த்தியாக இவ்வசதிகளை கையாள்கிறார்கள். அவர்களே ப்ளாக் நடத்துவது போன்று மற்றவர்களின் தளங்களிலும்  பின்னூட்டம் என்ற பெயரில் தங்களின் அரசியலை, கருத்துக்களை பதிவு செய்வதை முறைப்படுத்தி செய்கிறார்கள். பிரதம வேட்பாளராக மோடி முன்நிறுத்தப்பட சமுக வலைத் தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காண முடியும். 

நமது தலையீடு தேவைப்படுகிறது என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும் நாம் பேசுவதோடும் , வருந்துவதோடும் நின்று விட முடியுமா!

இதோ ஓர் எடுத்துக்காட்டு. வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் "ஒரு ஊழியனின் குரல்" என்ற ப்ளாக் ஐ நடத்தி வருபவர். 2009 லிருந்து பதிவுகளை இட்டு வருபவர். எது எது பரபரப்பாக பொதுவெளியில் பேசப்படுகிறதோ அதைபற்றிய பதிவு ராமனின் வலைத் தளத்தில் விடுபடாது. அவரின் எழுத்தாற்றலும் அவரின் பக்கங்களை நோக்கி பலரை இழுத்தது. ஏதாவது சங்கத்தின் பெரும் நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் வேண்டுமெனில் அவரது ப்ளாக் உடனே கைகொடுக்கும்.அரிய  செய்திகளை, வரலாற்றில் நினைவுகூரத் தக்க உரைகளை, எதிர்கால வரலாற்றிற்கான பதிவுகளை நேர்த்தியாக தனது ப்ளாக்கில் தொகுத்துள்ளார்.
இதற்காக அவர் செலவிடும் நேரம், முயற்சி, உழைப்பு எவ்வளவு இருக்கும் என்பதை இதுபோன்ற பணிகளைச் செய்யும் நண்பர்களுக்கு தெரியும். அர்ப்பணிப்பு இல்லாவிடில் இத்தகைய தொடர் முனைப்பு சாத்தியமில்லை.

AIIEA ன் பெருமைகளில் ஒன்றாக ராமனின் பணியும் மலர்ந்துள்ளது என்ற ஒரு வரி பாராட்டை தவிர வேறு எப்படி நமது உணர்வுகளை பிரதிபலிக்க முடியும்!

நேற்று தனது 1000 வது பதிவை ப்ளாக் ல் இட்டுள்ளார். தோழர் ராமன் ! தொடரட்டும் உங்களின் பணி. இன்னும் பல பல்லாயிரங்களை நோக்கி...