ஊடக விமர்சனக் குழு
எந்திரகதியான செயல்பாடுகளைக் கடந்து புதிய புதிய முன்முயற்சிகள்-ஒவ்வொருவரின் ஆற்றலையும் வெளிக் கொணர்வதற்கான முனைப்பு-துவங்கினோம், விட்டோம் என்றல்லாது தொடர்ந்த வினைகள்...
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (AIIEA) சென்னைக் கோட்டம் -2 , மகளிர் ஊடக விமர்சனக் குழு தனது ஓராண்டை டிசம்பர் 11 அன்று நிறைவு செய்துள்ளது.
ஓராண்டு நிறைவு என்பதால் பார்வையாளர்களும் அதிகமாக வந்திருந்தனர். மொத்தம் 62 பெண்கள். 20 ஆண்களும் இருந்தனர். ஊ. வி . குழுவின் அமைப்பாளர் கீதா தலைமை ஏற்க, சர்வமங்களா ஓராண்டு செயல்பாடுகள் பற்றி சிறு அறிமுக உரை நிகழ்த்தினார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், அவள் விகடன் போன்ற இதழ்களில் இக் குழுவின் பிரதிபலிப்புகள் பதிவாகி இருப்பதை குறிப்பிட்டார். 2009 ஏற்காட்டில் நடைபெற்ற முகாமில் இப்படியொரு ஆலோசனை உருவானதை நினைவு கூர்ந்த அவர் அதன் அமலாக்கத்திற்காக எடுத்த முயற்சிகளையும், உணர்வுபூர்வமாக மகளிரிடம் கிடைத்த ஒத்துழைப்பையும் விவரித்தார்.
பிறகு ஊடக விமர்சனக் குழுவின் 17 உறுப்பினர்கள் 150 நிமிடங்கள் பல்வேறு இதழ்கள் பற்றிய பார்வையை முன் வைத்தனர். THE HINDU, NEW INDIAN EXPRESS, TIMES OF INDIA, WIKI LEAKS, ஆனந்த விகடன், அவள் விகடன், குமுதம் சிநேகிதி,மங்கையர் மலர், மகளிர் சிந்தனை,நாணய விகடன்,பெண்மணி,கல்கி, உதயம், புதிய தலைமுறை ஆகிய 14 இதழ்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். எல்லோரும் குறிப்புகளோடு வந்திருந்தனர். அண்மையில் பரபரப்பாக பேசப்படும் ஊழல்களில் நிறுவன உலகத்தின் தொடர்புகள் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றி நுட்பமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. விக்கி லீக்சின் தகவல்கள் அமெரிக்காவின் மேலாதிக்க முயற்சிகளை திரைகிழித்துக் காண்பித்துள்ளதை பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக பிரச்சினைகளின் பரிமாணங்கள் விவரிக்கப்பட்டன. வேளச்சேரியில் மழை நீர் தேங்கி மக்கள் படகு வைக்காத குறையாக பட்ட அவதியில் ஏற்பட்டுள்ள கொஞ்ச முன்னேற்றம் வரை பேசப்பட்டன. எனவே மேடைக்கு ஏற்றாற் போல இதைப் பேசலாமா, அதைப் பேசலாமா என்ற வரையறை கூட உடைந்திருந்தது.இப்படி இறுக்கங்களைத் தளர்த்துவது கூட பலரையும் ஈடுபடுத்துகிற பாங்கு ஆகும்.
நேரம் ஓடியது தெரியாமல் பகிர்வு போய்க் கொண்டே இருந்தது. பொதுவாக மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எப்போது முடிப்பீர்கள் ? என்ற நிர்ப்பந்தம் ஏற்பாட்டாளர்கள் மேல் இருக்குமென்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந் நிகழ்ச்சியில் எப்போது பங்கேற்பாளர்கள் முடிப்பார்கள் என்ற கவலை ஏற்பாட்டாளர்களுக்கு இருந்தது. எதுவுமே இருவழிப் பாதையாக இருந்தால் ஈடுபாட்டிற்கு பஞ்சம் இருக்காது என்ற அனுபவத்தை தலைவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.
பங்கேற்றவர்களின் பெயர்களின் பதிவு முக்கியமானது. அனுஜா, கோமதி, லதா, லெட்சுமி, ஜெயலெட்சுமி, துளசி, சரளா தேவி, ஹேமலதா, தெரசா, ராஜேஸ்வரி, உமா மகேஸ்வரி,ஆனந்தி, லதா ஆகியோர் அற்புதமான சொல்லாட்சியோடும், ஆழமான புரிதலோடும் 150 நிமிட காலம் முழுவதிலும் அவையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஓராண்டு நிறைவு பற்றி ஜெயந்தி ஓர் கவிதை படைத்தார்.
அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லா கான் எழுதி வெளிவந்துள்ள "UNDERSTANDING THE FINACIAL CRISIS" என்ற ஆங்கில நூல் பற்றிய மதிப்புரையை சர்வமங்களா முன்வைத்தார்.20 நிமிடங்களில் அப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிய ஆர்வத்தையும், அது குறித்த தேடலையும் உருவாக்குவதாய் மதிப்புரை இருந்தது. அநேகமாக புது டெல்லியில் நவம்பரில் வெளியான இந் நூலுக்கான முதல் மதிப்புரைக் கூட்டமாக இதுவே இருக்குமென்று SZIEF பொதுச் செயலாளர் கே சுவாமிநாதன் இந் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இந் நிகழ்ச்சியில் நாங்கள் கற்றுக் கொண்டதே அதிகம் என தென் மண்டல மகளிர் துணைக் குழவின் அமைப்பாளர் கண்ணம்மாள் மனதாரக் கூறியது கொஞ்சமும் மிகை அல்ல.
தொழிற் சங்கத்தின் பன்முகப்பட்ட செயல்பாட்டிற்கு இம் முன்முயற்சி மிகச் சிறந்த உதாரணம். சென்னை 2 மகளிர் புதிய அத்தியாயத்திற்கான முன்னுரையை எழுதி உள்ளார்கள். இன்னும் அடுத்தடுத்த பக்கங்கள் விரியட்டும். மற்ற கோட்டங்களும் பின் தொடரட்டும்.
ஆக்கப்பூர்வமான நிகழ்வு. நிகழ்வில் பேசியவைகளை ஒரு கட்டுரையாக தொகுத்து வெளியிடுங்கள்.
ReplyDeleteஅன்பார்ந்த தோழரே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவன் என்ற வகையில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். சென்னைக் கோட்டம் 2 தோழர்களின் முயற்சி உண்மையிலேயே பாராட்டுதலுக்குரிய ஒன்று. மகளிர் தோழர்கள் புத்தகங்களைப் படித்து குறிப்புகள் எடுத்து வந்து அங்கே அதை சமர்ப்பித்தது பாராட்டுதலுக்குரிய ஒன்று. ஓராண்டு நிறைவு செய்திருக்கும் சென்னைக் கோட்டம் 2 தோழர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும். - சிவா, சென்னை.
ReplyDelete