இன்று சென்னையில் திருமிகு சாய்நாத் பங்கேற்ற ஓர் சிறப்பு கருத்தரங்கம் நடந்தேறியது. ஸ்லம் டாக் Vs மில்லியனர்கள் என்ற தலைப்பில் அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திரு சாய்நாத் அவர்களின் 30 ஆண்டு ஊடக பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 1980 ல் யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் பணியை துவக்கிய அவர் பின்னர் பிலிட்ஸ் ( BLITZ ) இதழில் செயலாற்றினார்.
உலகமயம் ஒரு பக்கம் பளபளக்கிற இந்தியாவையும் , இன்னொரு பக்கம் பரிதவிக்கிற இந்தியாவையும் உருவாக்கியுள்ள நிலையில் அப் பொருளாதார பாதையின் பாரபட்சத்தை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டுகிற சமுக பிரக்ஞை அரிதாக உள்ளது. ஆனால் ஊடக உலகின் மனசாட்சி போல விவசாயிகளின் தற்கொலைகளை வெளியில் விவாதப் பொருளாக மாற்றிய பெருமை சாய்நாத்திற்கு உண்டு.
ஊடக உலகின் படைப்புகளை எல்லாம் குளு குளு அறைகளில் இருந்தும், இணைய தளத் தேடல்களில் இருந்தும் மட்டுமே உருவாக்குகிறவர்கள் எத்தனையோ பேர். சாய்நாத் கால்களோ ஆண்டு முழுவதும் இந்தியாவின் கிராமங்களின் மேடு பள்ளங்களிலும், புழுதியிலும் பயணித்து கொண்டே இருக்கின்றன. ஒரு ஆண்டில் 270 நாட்களில் இருந்து 300 நாட்கள் வரை கிராமங்களில்தான் அவர் இருக்கிறார். அவர் செல்லில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வருவதாக பலரும் சொல்கிறார்கள். இந்திய ஊடக உலகின் தொடர்பு எல்லைக்கு அப்பால்உள்ளவர்களோடு அவர் இருக்கிறார் என்பதே அதன் பொருள்.
சென்னை பாலமந்திர் ஜெர்மன் ஹாலில் நடந்த இக்கருத்தரங்கில் திருமிகு சாய்நாத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கே சுவாமிநாதன் ( பொதுச்செயலாளர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு) இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதோடு சாய்நாத்தின் உரையை தமிழில் சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்திய சமுக விஞ்ஞான கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது.அவ்வமைப்பின் தலைவர்கள் திரு ஞானகுரு, திரு.ரமேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். 300 பேர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் சாய்நாத்தின் குடும்பத்தினரும் இருந்தனர்.
சாய்நாத் உரையை நிறைவு செய்தவுடன் அரங்கம் முழுவதும் ஒரு சேர எழுந்து நின்று கரவோலியால் வாழ்த்தியது உணர்ச்சிகரமாக அமைந்தது. நிறுவன உலகின் பகட்டுக்கு விலை போகாத ஓர் மனிதனுக்கு இம்மரியாதை பொருத்தமானதே!
No comments:
Post a Comment