Tuesday, November 5, 2013

தங்கராஜ்: சமகாலத்து சமூகநீதிப் போராளி

சு. வெங்கடேசன்

தங்கராஜ்
தங்கராஜ்
இதை எழுதவா நான் எழுத்தைப் பயின்றேன் என்று மனம் விம்முகிறது. ஆனால் இதை எழுதாமல் எழுத்தைப் பயின்று என்ன பயன் என்று அறிவு வலியுறுத்துகிறது.
தீமைகளைக் கண்டு வாழ்வு பணிந்து விடுவதில்லை, எல்லாக் காலங்களிலும் அதனை எதிர்ப்பதற்கான சக்தியை மனிதன் தனது வாழ்வுக்குள் இருந்துதான் கண்டறிந்து கொடுக்கிறான். ஆனால் எல்லோரும் கண்டறிந்து கொடுத்துவிடுவதில்லை. ஒருசிலர் மட்டுமே அதனைச் செய்கின்றனர். அதைச் செய்த ஒருவர் அக்டோபர் 29-ம் தேதி மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

ஜனநாயக மாண்புகளைப் பாது காக்கும் பெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தங்கராஜ், அதன் பொருட்டு அவர் சந்தித்த இன்னல்கள், அவமானங்கள், இழப்புகள் எண்ணற்றவை. மதுரை மாவட்டத்தில் நத்தப்பட்டி என்ற சிற்றூரில் சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தங்கராஜ். குடும்பச் சூழல் எட்டாம் வகுப்போடு அவரது பள்ளிக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இளம் வயது முதலே மார்க்சிஸ்ட் கட்சியோடு தன்னை இணைத்துக்கொண்டவர்.

1996-ம் ஆண்டு உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஊடகங்களில் அடிபடத் தொடங்கிய கிராமப் பெயர்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இம்மூன்று கிராமங்களிலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை ஏற்கமுடியாது என எதிர்ப்புத் தெரிவித்த சாதிய சக்திகள் பத்து ஆண்டுகள் தலித் மக்களை அப்பதவியில் அமரவிடாமல் செய்தனர். தீண்டாமையின் புதிய வடிவம் ஒன்றை உலகுக்குப் பறைசாற்றினர்.

17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டும் அரசியல் சாசனம் கூறும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை. சட்டம் சாதியத்துக்குக் கீழ்ப்படிந்த நிலை கண்டும் ஆள்வோருக்குக் கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் கண்டனத்தைச் சந்தித்த பின்பும் மாநில அரசு தனது நிலைகளில் மாற்றம் கொண்டுவரவில்லை. இந்நிலை யில் இதனை ஜனநாயக சமூகத்தின் அவமானமாகக் கருதி, இதற்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியவர்கள் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் இத்தேர்தல்க ளில் ஐந்து முறை வேட்பாளர்களை நிறுத்தினர். கிராம முடிவுக்கு எதிராக யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை அவர்கள்தான் முதலில் உடைத்தனர். அதுவரை தேர்தலே நடத்த முடியாத நிலையை உருவாக்கியிருந்த சாதிய சக்திகள், அதன் பின் தேர்தலை நடத்தி, வெற்றி பெறுபவரை ராஜிநாமா செய்யவைக்கும் புதிய உத்தியைக் கண்டுபிடித்தனர்.

இப்புதிய உத்தியை முறிக்கும் தந்திரத் தோடு, இந்த ஜனநாயகப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது மார்க்சிஸ்ட் கட்சி. 2006-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இம்மூன்று கிராமங்களிலும் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 56. இதில் கிராமத்தின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் 20 பேர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் 20 பேர். மாவட்ட நிர்வாகத்தின் பிரச்சாரத்தால் உந்தப்பட்டு சுயேச்சையாகப் போட்டி யிட்டவர்கள் 16 பேர். இத்தேர்தலே பத்தாண்டுக் கால அநீதியை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கொள்கையில் உறுதி

பத்தாண்டுகளாக யாராலும் என்ன செய்தும் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று எப்படி 2006-ல் முடிவுக்கு வந்தது? அதன் பிறகும் அவர்களைப் பின்னுக்கு போகவிடாமல் நிறுத்திவைத்தது எது என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் இம்முயற்சிக்குப் பின்னால் இருந்த பலரின் உழைப்பும், உறுதிப்பாடும், தியாகமும் தெரியவரும். அவற்றின் முதன்மை நாயகன் தங்கராஜ். தனது சொந்த சாதிக்கு எதிராக, உறவுகளுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் வீரம் மிக்கது. அதன் பொருட்டு அவர் சந்தித்த இன்னல்கள், அவமானங்கள் ஒருபோதும் அவர் வாய் திறந்து பேசாதது. தான் தேர்வு செய்த கொள்கைக்குத் தான் கொடுக்கவேண்டிய விலை இது என்ற புரிதலோடு அவர் வாழ்வை முன்னெடுத்தார். சாதியத்தைப் பற்றியும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதலே இச்செயல்பாட்டின் அடிப்படை.

சாதிய சக்திகளுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பிளவை உருவாக்குவதில் அவர் ஆற்றிய தீரமிகு பங்கே தேசிய அவமானத்தில் இருந்து தமிழகம் தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்தது.

தகர்ந்த தீண்டாமைச் சுவர்

இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வின் வழியே வெளி உலகின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது உத்தப்புரம் தீண்டாமைச் சுவர். அதன்பின் ஆண்டுக்கணக்காக நீடித்தது அந்தச் சுவருக்கு எதிரான போராட்டம். காவல்துறையின் தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு, மரணம் என நீடித்தன நிகழ்வுகள். இப்போரட்டங்களில் எல்லாம் உத்தப்புரம் தலித் மக்களோடு இணைந்து சோர்வறியாது இயங்கியவர் தங்கராஜ்.

சமநிலைச் சமூகத்தை உருவாக்கும் பயணத்தில், தீமையுடன் சமரசம் செய்தல் பண்பாகாது என்று தங்களின் வாழ்வின் மூலம் சொல்லிச் சென்ற முன்னோர்கள் பலர். அவ்வழியே பயணித்த நிகழ்கால சாட்சியம்தான் தங்கராஜ். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, தலித் மக்களின் விடுதலைக்காக அயராது உழைத்து, தென்தமிழகம் எங்கும் செயல்பாட்டை விரித்ததன் மூலம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரானார்.

தனது 49-வது வயதில் இயக்கப் பணியாற்றிவிட்டுத் திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைய நேரிட்டது. தமிழ்ச்செல்வி தனது கணவனையும், அனாமிகாவும், அனுசீலனும் தனது தந்தையையும் இழந்து தவிக்கிறார்கள். இச்சமூகமும் சமநீதிக்கான போராளியை இழந்து தவிக்கிறது.

தங்கராஜின் வாழ்வு மொத்த சமூகத்துக்கான முன்னுதாரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் மனிதக் கூட்டம் சிக்கியிருக்கும் இக்காலத்தில் ஒருவர் சமூக மேன்மைக்காகத் தன்னை எப்படி ஒப்புக்கொடுத்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது மனம் பணிந்து வணங்குகிறது.

(கட்டுரையாசிரியர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்)

நன்றி - தி இந்து (தமிழ்) 05.11.2013

No comments:

Post a Comment