Wednesday, January 19, 2011

அந்த டிசம்பர் 25!


டிசம்பர் 25ம் தேதி என்றால் உலக கிறிஸ்தவர்களின் புனிதநாள் என்பது வரலாற்றுப் பதிவாகி 2010 ஆண்டுகளை உலகம் கடந்துவிட்டது. 1968 டிசம்பர் 25, வெண்மணி நிகழ்வு தமிழக உழைப்பாளி மக்கள், குறிப்பாக கிராமப்புறத்து உழைப்பாளிகளின் மனதில் பதிவாகி, இப்போது வரலாற்றுப் பதிவாக மாறிவிட்டது. இயேசுவின் பிறப்பை அறிவிக்க வான் மண்டலத்தில் தோன்றிய ஒளி வெள்ளம் பூமியை நோக்கி நகர்ந்து, நகர்ந்து பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து நிலைகொண்டது என்பது பைபிளின் கதை. ஆனால் 1968 டிசம்பர் 25 இரவு 12 மணிக்கு கீழத்தஞ்சை வெண்மணியில் விவசாயக் கூலி தொழிலாளி இராமய்யாவின் குடிசையில் நிலப்பிரபுக்களால் வைக்கப்பட்ட தீ எரிந்து வான் மண்டலத்தையே சிவப்பு வெளிச்சமாக்கியது. அந்த குடிசைக்குள் நெருப்பில் வெந்து துடித்த 44 தலித் விவசாய கூலித்தொழிலாளிகளின் மரண ஓலமும் விண்ணைத் தொட்டது.


இயேசு பிறப்பிற்குப் பின்பு புதிய கால நிர்ணயம், வரலாற்றில் உருவாக்கப்பட்டது. அது இயேசு பிறப்பிற்கு முன், இயேசு பிறப்பிற்குப் பின் என குறிப்பிடும் வகையில் கி.மு., கி.பி., என்ற காலவரையறை உருவாக்கப்பட்டது. அதே போல் கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளிகள் குறிப்பாக தலித் பண்ணை அடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையில் 1968 வெண்மணி நிகழ்வுக்கு முன், வெண்மணி நிகழ்வுக்குப் பின் என்று இரண்டு கட்டமாக வரலாற்றை பிரித்துச்சொல்லும் மாற்றங்களை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும், பண்ணை அடிமை சமூக அமைப்புமாகத்தான் கீழத்தஞ்சை 1968 வரை நீடித்தது. இந்த நடைமுறை காவிரி டெல்டா பகுதி முழுவதும் பரவியிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு பண்ணைத் தொழிலாளியின் வாழ்க்கை, பிறப்பில் இருந்து இறப்பு வரை அவனாலோ அவனது பெற்றோராலோ எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. அவனின்றி அணுவும் அசையாது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து. ஆனால் எந்த ஆன்மீகவாதிகளும் கடவுளைக் கேட்டு உத்தரவு பெற்று எதையும் செய்வதில்லை. தன் இஷ்டத்திற்கு அனைத்தையும் செய்துவிட்டு என் செயல் எல்லாவற்றையும் கடவுளே தீர்மானிக்கிறார் என கடவுளின் மீது பழிபோடும் போக்கே நடக்கிறது. ஆனால் ஒரு பண்ணை அடிமையின் வாழ்க்கை அப்படியல்ல.

ஆண்டையின் அனுமதியின்றி ஒரு பண்ணைத் தொழிலாளி துரும்பைக்கூட அசைக்க முடியாது. அசைக்கக்கூடாது. அப்படி மீறி செயல்பட்டால் இந்தப் பூவுலகில் அவனுக்கு வாழ்க்கை இல்லை. ஒரு பண்ணை அடிமை அடித்துக் கொல்லப்பட்டால் கொலை செய்த ஆண்டையின் மீது சட்டம் எந்த நடவடிக்கையையும் எடுக்காது. பல நூறு ஆண்டுகள் இருந்த இந்த நடைமுறை இறுக்கத்திற்கு ஒரு தளர்ச்சி ஏற்படத்துவங்கியது 1935க்கும் 1945க்கும் இடைபட்ட காலத்தில்தான்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் ஜமீன்தாரி நிர்வாக முறை, சமஸ்தான ஆட்சி முறை பிரிட்டிஷ் அரசு ரெவின்யூ நிர்வாக முறை இவைகளுக்கு எதிராக விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பும், கலவர நடவடிக்கைகளுமே ஏழை, எளிய விவசாய கூலித்தொழிலாளர்கள் மத்தியில் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட உணர்வுகளை கிளப்பியது. தேசம் முழுவதும் இதுபோன்ற போராட்ட அதிர்வுகள் ஏற்பட்டதன் வேகம் தஞ்சை மண்ணிலும் பரவியது. இந்த அதிர்வுகளை வேகப்படுத்தி, தூண்டுதல் செய்து பாதிக்கப்பட்டோரை வீதியில் இறக்கியது செங்கொடியும், 1944ல் தென்பரையில் உருவாக்கப்பட்ட விவசாயிகள் சங்கமும்தான்.

குத்தகை வாரம், மரக்கால் மாற்றம் எனத்துவங்கி வேலை நேர நிர்ணயம், கூலி நிர்ணயம், கூலி உயர்வு என பல்வேறு முழக்கங்களோடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம் உசுப்பிவிடப்பட்டது. பொருளாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி துவக்கப்பட்ட போராட்டங்கள், காலப்போக்கில் தலித்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும் கிளம்பியது. ஒரு தலித்திடம் ‘உன்னை அடித்தால் திருப்பி அடி’ என்ற தைரியத்தை கொடுத்த தலைவன், செங்கொடி இயக்கத்தலைவன் தோழர் பி.சீனிவாசராவ்தான்.

இந்த முழக்கம் தஞ்சை தரணி முழுவதும் பரவியது. ஆண்டைகளுக்கு இது மின்சாரத்தை பாய்ச்சியது போல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விவசாயத் தொழிலாளிகள், தலித் தொழி லாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமான வர்க்கப்போராட்டமாக மாறியது. பண்ணையாருக்கும் நிலப்பிரபுகளுக்கும் அரசின் காவல்துறையும், சட்டமும் துணை போனது. உழைப்பாளிகளுக்கும் தலித்துகளுக்கும் பண்ணை அடிமைகளுக்கும் செங்கொடியும் அதன் தலைவர்களும் உறுதுணையாக நின்றனர். தோழர் சீனிவாசராவ், அமிர்தலிங்கம், பி.எஸ்.தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, மணலி கந்தசாமி, கே.ஆர்.ஞானசம்பந்தம், என்.ஜி.முருகையன், கோ.வீரய்யன், வெங்கடேச சோழகர், ஏ.எம்.கோபு, ஏ.கே.கணேசன், சமீபத்தில் மறைந்த தோழர் வேதையன் இப்படிப்பட்ட செங்கொடி இயக்க படையின் தளபதிகள் உயிரை துச்சமென மதித்து பண்ணை அடிமைகளையும், தலித் மக்களையும் திரட்டிப் போராடி, புதிய மாற்றங்களை நோக்கி செல்வது என்பது உறுதியானது. தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு மற்றும் நிர்வாகத்தின் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உழைப்பாளி களின் போராட்டம் தோலுரித்துக்காட்டியது.

தலித்துகளை சாட்டையால் அடிக்கக்கூடாது. சாணிப்பால் குடிக்க சொல்லக்கூடாது என்று 1964ல் மன்னார் குடியில் ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் பண்ணை முதலாளிகள் தங்களது அதிகாரமே போகிறதே என்ற ஆவேசத்தில் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற போர்வையில் இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் மாவட்டம் முழுவதும் ஒன்று திரண்டார்கள். கூலித்தொழிலாளிகளுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிவப்புக்கொடியை இறக்கு, பச்சைக் கொடியை ஏற்று என்று விவசாயத் தொழிலாளிகளையும் குத்தகை விவசாயிகளையும் மிரட்டினர். மீறியவர்களின் மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இக்காலத்தில்தான் 1968ல் அரைப்படி நெல் அறுவடைக்கூலியை உயர்த்தித்தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நெல் உற்பத்தியாளர்கள் இப்போராட்டத்தை உடைப்பதற்காக எதையும் செய்யத் தயாரானார்கள். இந்த ஆத்திரத்தின் உச்சகட்டம்தான் வெண்மணி தீ வைப்பு.

எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்று வழக்கில் ஒரு சொல் உள்ளது. பண்ணை அடிமை, தலித் ஒடுக்குமுறை, ஆண்டானின் ஆதிக்கம் இவையனைத்திற்கும் சேர்த்து வெண்மணி தீ வைப்பு ஒரு முடிவை ஏற்படுத்தியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம், தீ வைத்துக் கொளுத்திவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கருதினர். ஆனால் அதுவே எதிர்விளைவுகளை உருவாக்கியது. பூகம்பத்திற்கு பின்பு புதிய மாற்றம் ஏற்படும் என்பதுபோல், வெண் மணி தீவைப்பின் பிரளயம் மாபெரும் மாற்றங்களை தஞ்சை மண்ணில் கொண்டுவந்தது.

நிலப்பிரபுக்களின் நெல் உற்பத்தியாளர் சங்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பண்ணை அடிமை முறை முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சாணிப்பால், சாட்டையடி பழைய கதையாக மாறியது. கீழத்தஞ்சைக்கென ஒரு கூலிச்சட்டம் அமலுக்கு வந்தது. குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டம் நிரந்தரமானது. 1968க்கு முன்பு ஒரு அடி கூட சொந்த இடமில்லாத தலித்துகள், 1968க்குப் பின் இந்த 40 ஆண்டுகால இடைவெளியில் ஒன்றரை லட்சம் தலித் மக்கள் சுமார் 2லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக, உழவடைதாரர்களாக மாறியிருக்கிறார்கள். எனவே சாதிய ஒடுக்குமுறை, தலித்துகள் மீது நேரடி தாக்குதல்கள் பெருமளவு மறைந்துவிட்டது. 1968 டிசம்பர் 25 வெண்மணி பூகம்பம் தஞ்சையில் பல மாற்றங்களைச் செய்ததுடன் புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

வெண்மணி தீயில் வெந்து கருகிய 44 தியாகிகளின் தியாகம் வீணாகவில்லை. செங்கொடி இயக்கத்தின் தலித் உழைப்பாளிகளும், விவசாயத் தொழிலாளிகளும் புதிய வரலாற்றை எழுதுவதற்கான போர்க்களத்தை உருவாக்கிச் சென்றுள்ளார்கள்.

- கட்டுரையாளர்: -ஏ.லாசர், மாநிலத்தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

No comments:

Post a Comment