Saturday, December 8, 2012

தர்மபுரி-சாதி என்று சாம்பலாகும்!

நத்தம், கொண்டாம்பட்டி,அண்ணாநகர் கிராமங்களில் 

புகைப்படம்
கொண்டாம்பட்டியில்
 புகைப்படம்
பெண்களின் குமுறல்கள்
 புகைப்படம்
எரிந்த இல்லங்கள்
புகைப்படம்
சாதி என்று சாம்பலாகும்!

தர்மபுரியின் நத்தம் , அண்ணாநகர் , கொண்டாம்பட்டி கிராமங்களுக்கு நவம்பர் 17, டிசம்பர் 4 ஆகிய இரண்டு நாட்கள் நேரில் சென்று கொடூரத் தாக்குதலுக்கு இலக்கான மக்களை, அவர்களின் இல்லங்களை, நொறுங்கிப்போன வாழ்க்கையை பார்த்த தாக்கத்தோடு இதனை எழுதுகிறேன்.


இந்தியச் சமுகத்தில் சாதீய - பாலின ஒடுக்குமுறைகள் இரண்டறப் பிணைந்தே இருக்கின்றன. சாதீய விருட்சத்திற்கு அகமண முறையே வேராகத் திகழ்கிறது. அதுபோல ஆதிக்க வெறியை நிலை நாட்ட விரும்புபவர்களும் பெண்களையே குறிவைக்கின்றனர். எனவேதான் சாதீய மறுப்புத் திருமணங்கள் இன்றைக்கு சாதி  வெறியர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. 

தந்தை பெரியார் கலப்புத் திருமணங்கள் என்ற சொல்லாடலையே ஏற்க மாட்டார். இது என்ன மனிதனுக்கும், மிருகத்திற்கும் நடக்கிற கல்யாணமா, கலப்பு என்று சொல்வதற்கு என்பார். ஆண் பெண் விருப்பம் என்பதைத் தவிர வேறு எதுவுமே கலக்காத சாதி மறுப்புத் திருமணத்தை போய் கலப்பு மணம் என்று ஏன் சொல்லவேண்டும்? என்பதே அவரின் கேள்வி. விருப்பங்கள் நிராகரிக்கப் படும் சமூகச் சூழலில் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை.

தமிழகத்தில் உள்ள சாதி அமைப்புகள் எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக பேசுவது, வன்முறையை தூண்டுவது என்பது சில மாதங்களுக்கு முன்பிருந்தே அரங்கேறத் துவங்கிவிட்டன. சாதி வெறி என்பதை அங்கிருந்து, அருகில் இருந்துதான் கிளப்பவேண்டும் என்பதில்லை.தர்மபுரி சூடாவதற்கான நெருப்பு மாமல்லபுரத்தில் இருந்து கூட வைக்கப்படலாம். ரிமோட் மூலம் இயக்குவது போல் இதற்கான அரசியல் பட்டன் ஏற்கனவே அழுத்தப்பட்டுவிட்டது. வினோதம் என்னவெனில் ஓர் பட்டியலின முதல்வரைக்  கொண்டுவருவேன் என்றவர், சமுக நல்லிணக்க மருத்துவர் என்று பட்டம் சூட்டப்பட்டவர், அம்பேத்கர் விருதையே வாங்கியவர் சேனலை மாற்றுவது போல் இப்போது 40 பிற்பட்ட அமைப்புகளைத் திரட்டக் கிளம்பிவிட்டார். சரியான சமுக,பொருளியல் பார்வையோடு மக்கள் திரட்டப்படாவிட்டால் யார் எப்படி நிறம் மாறுவார்கள் என்பதற்கு இது ஓர் சாட்சியம்.

சில மாதங்களுக்கு முன்பே தஞ்சை சூரக்கோட்டை மாரிமுத்துவின் படுகொலை நிகழ்ந்தது. அங்கங்கள் எல்லாம் சின்னா பின்னமான அக்கோரத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது.சென்னையில் மனித உரிமை ஆணையம் நடத்திய பொது விசாரணையில் மாரிமுத்துவின் மனைவி அபிராமி தன் கைக் குழந்தையோடு வந்திருந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்ட பின்னணியில் அரசு வேலை தருவதற்கு உத்தரவுவிசாரணையில் இடப்பட்டது. ஏன்  அப்பாவை கொன்றுவிட்டார்கள் ? என்று அபிராமியை அக்குழந்தை கேட்டால் என்ன அவர் பதில் சொல்வார்! நேரு விளையாட்டரங்கில் புல்வெளியின் மென்மையில் மகிழ்ந்து கொண்டு இருந்த அக் குழந்தைக்கு சாதியச் சமுகத்தின் வன்மையான முட்புதரை எப்படி நாளை காண்பிப்பது!

நத்தம் இளவரசனை விரும்பி திருமணம் செய்து கொண்டு வந்த திவ்யாவின் காதலில் என்ன குற்றம்! இத் திருமணம் மட்டும் இவ்வெறியாட்டத்திற்கு காரணம் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால் ஓர் அரசியல் தலைவரோ அதையே விவாதப் பொருளாக மாற்றிவிட்டார். இருக்கட்டும். இம் மூன்று கிராமங்கள் மீதும் "படையெடுத்து" வந்த 1500 பேருக்கு திவ்யாவின் விருப்பத்தில் தலையிட, தீர்மானிக்க என்ன உரிமை இருக்கிறது? திவ்யாவை கடத்திவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் தருமபுரி நீதிமன்றத்தில் கூண்டில் ஏறிய திவ்யா  நான் விரும்பியே இளவரசனை மணம் புரிந்தேன் என்று உறுதியாகச் சொன்னாரே! அதற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் யாரோ, எத்தனை பேரோ காதல் மணம் புரிந்து கைவிட்டுவிட்டார்கள் என்று ஏதோ கணக்கு சொல்கிறார்கள். வாதத்திற்காக கேட்போம். நாமக்கல் கணக்கு வடி கட்டின உண்மை என்று வைத்து கொண்டாலும் அதற்காக தர்மபுரியில் அடிப்பார்களா!  

தாக்கியவர்களை விட மோசமான குற்றவாளிகள் யார் தெரியுமா! இக்கொடுரத்தை தர்க்க ரீதியாக நியாயப் படுத்த முயற்சிப்பவர்கள்தான் .ஒரு  பரபரப்பு வார இதழ் " தந்தை நாகராஜன் என்னோடு வந்துவிடு என்று எவ்வளவோ கெஞ்சி அழைத்தும் காதல் மோகத்தால் வர மறுத்துவிட்டாள்" என்று எழுதியது. இது ஊடக வன்முறை. பேனாவுக்குள் மையோடு சாதியையும் கலந்து எழுதுகிறார்கள்.

நாங்கள் நத்தம் கிராமம் போன போது அங்கே 1986 லேயே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட யசோதா என்ற பெண்மணியைப் பார்த்தோம். அவர் கேட்டார். " நான் வெறுங்கையோடு இந்த வீட்டிற்கு வந்தேன். நாங்கள் இருவரும் பாடுபட்டு உழைத்து சேர்த்தோம்.
26 வருடத்தில் ஒரு குண்டூசியைக் கூட எனது பெற்றோரிடம் கேளு என்று  எனது கணவர் சொன்னதில்லை. பிள்ளைகள், பேரக் குழந்தைகளையும் பார்த்துவிட்டேன். என்ன குறைந்துவிட்டோம். நானும் இந்தக் கிராமத்தை தாக்கிய வெறியர்களின் சாதியைச் சேர்ந்தவள்தான். ஆனால் எனது வீடு, வாகனம், தொழிலுக்காக வைத்திருந்த மரங்கள் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டர்களே! ஓட்டுகளுக்காக இவர்கள்தானே எனது வாழ்க்கையை பாழாக்கியிருக்கிறார்கள்" . ஆயிரம் மேடை போட்டு சொன்னாலும் சொல்ல முடியாத பதிலை இயல்பான வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சுளீரென யசோதா சொன்னார். 

கொண்டாம்பட்டி ராசு வீட்டிலும் ஒரு சாதிமறுப்புத் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது. ஊருக்குள் வந்து விசாரித்த பெண்ணின் பெற்றோர் நல்ல பையன்தான் என்று சமாதானம் ஆகிச் சென்றார்களாம். ஆனால் அதற்கு முன்பு சாதியக் கலாசாரக் காவலர்கள் செய்த அட்டுழியத்தை ராசு வாயால் கேட்ட போது அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனம் வழி நடத்துகிறதா? அல்லது மனுதர்மம்தான் இன்றைக்கும் கோலோச்சுகிறதா? என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. சென்னை போரூரில் இருந்து காதல் திருமணம் செய்து அங்கு குடியேறியுள்ள  ஒரு பெண்ணோ  "நாங்க நல்லாதானே இருக்கிறோம், எங்களுக்கு என்ன குறை" என்கிறார். இப்படிப்பட்ட குருவிக் கூடுகள் எல்லாம் பிய்த்து எறியப்பட்டுள்ளன.

உணர்ச்சிவயப்பட்ட தாக்குதல் என்று முடிவுக்கு வர முடியவில்லை. பீரோக்கள் உடைக்கப்பட்டு விலை  மதிப்புள்ள பொருட்கள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன என்று ஒவ்வோர் வீட்டிலும் குற்றம் சாட்டுகிறார்கள். பிறகு பெட்ரோல் ஊற்றி வாழ்வாதாரங்கள் எல்லாம் அழிக்கப்ட்டுள்ளன. ஓர் காவல்துறை காவலர் வீடும் தப்பவில்லை. கான்க்ரீட் வீடுகளும் தகர்க்கப்பட்டுள்ளன. பட்டியலின மக்களின் சுய சார்பான வளர்ச்சி மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.மூன்று ஊர்களை இப்படி சிதைப்பது என்றால் சில மணி நேரங்கள் தேவை. அரசாங்கம்-சட்டம்-காவல்துறை-நிர்வாகம் எல்லாம் என்ன செய்தது என்ற கேள்விதான் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்  என்ற கோரிக்கையாக மாறியுள்ளது. சி.பி.ஐ விசாரணை கோரப்படுகிறது. 

ரூ 50000 நிவாரணம் என்கிற அரசின் அறிவிப்பு மக்களின் இழப்பை எந்தவகையிலும் ஈடு செய்துவிடாது. அப்பணத்தை வைத்து ஒரு கழிப்பறை கூட கட்ட முடியாது. வீடு எது வெளி எது என்று தெரியாமல் கடந்த ஏழாம் தேதியில் இருந்து வாழ்ந்து வருகிற மக்களைப் பார்த்து அற்ப சொற்ப நிவாரணம் எள்ளி நகையாடுவது போல் உள்ளது. உளவியல் ரீதியான இழப்புகளுக்கும் நிவாரணம் உண்டு என்கிற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அதிகார வர்க்கத்தினர்என்றாவது படித்திருக்கிறார்களா! இப்படி பயன்படுத்தப்படாத வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத்தான் இன்னும் மழுங்கடிக்க வேண்டும் என்கிறார்கள் பெண்களைக் காக்க புது அவதாரம் எடுத்துள்ளவர்கள்.

ஒரு மேல்நிலைதேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஒருவீட்டில் கருகிக் கிடந்தது. டி.எஸ்.பி தைரியம் கூறியும் ஒரு குழந்தை பள்ளிக் கூடத்திற்கு அச்சத்தால் போக மறுக்கிறது என்று ஒரு தாய் சொன்னாள். மீதக் குழந்தைகளும் காவல்துறை வேனில் பள்ளிக்கு போய் வருகிறார்கள். அப்போதுதான் கல் விழாது போலிருக்கிறது. சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பள்ளிக் கூடத்தில் சொல்லித் தரும்போது இக் குழந்தைகளின் மனதிற்குள் என்ன ஓடும்! 

நண்பர்களே! சகோதரிகளே! களத்தை விட சமூகத்தைக் கற்க வேறு ஓர் சிறந்த பள்ளிக்கூடம் இருக்க முடியாது. நமது தருமபுரி கிளைச் சங்கத் தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். கொடுரம் நடந்த அக்கிராமத்திற்குள் போர்வைகளோடு, மளிகை பொருட்களோடு முதலில் சென்ற இயக்கம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பின்னர் 318 குடும்பங்களுக்கும் பெண்களுக்கான புதிய ஆடைகளோடு சென்றோம். பிறகு வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள் என சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தருமபுரி நோக்கிச் செல்வது தொழிற்சங்க இயக்கத்திற்கு புதிய பாதையை, புதிய பார்வையை  தந்திருக்கிறது. முதலில் சென்ற  AIIEA  வின் பணியே எங்களுக்கு முன்னுதாரணம் என்று அச் சங்கங்கள் மனப்பூர்வமாகச் சொல்கின்றன. தமிழகம், கேரளக் கோட்டங்கள் 24 மணி நேர இடைவெளிக்குள் ரூ 170000 ஐ திரட்டியதும் , விரைந்ததும் , அப்பணிகளை சேலம் கோட்டம் நேர்த்தியாக ஒருங்கிணைத்ததும் காலத்தில் ஆற்றிய கடமை. தலித்துகளின் விடுதலைக்கு தலித்துகள் மட்டும் போராடினால் போதாது எனபதை அறிவுரையாகச் சொன்னால் அது குப்பைக்குத்தான் போகும். அதையே களத்தின் அனுபவமாக மாற்றினால் நம்பிக்கையாய் மாறும். தலித் அல்லாதவர்களின் விடியலும் தலித்துகள் இணையாமல் இல்லை எனபதையும் உணர்ந்துகொண்ட உணர்வு பூர்வமான பயணம் அது.

டிசம்பர் 6 - அம்பேத்கரின் நினைவு நாளை அனுசரிக்கும் போது அவர் வகுத்த பாதையில் சிறு தூரத்தையாவது கடக்க முயற்சித்துள்ளோம் என்ற உண்மை மனதை மென்மையாக வருடிக் கொடுத்தாலும் இன்னும் செல்லவேண்டிய தூரமும், ஆற்ற வேண்டிய பணியும் நிறைய இருக்கிறது  என்ற பேருண்மை மனசை ரொம்பவே கனக்கச் செய்கிறது.

No comments:

Post a Comment