Thursday, October 4, 2012

சிதம்பரத்தின் செல்லக் கிளி வேறென்ன சொல்லும்?



க.சுவாமிநாதன் 

* இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 49 % ஆக உயருமென அறிவிக்கப்பட்டுள்ளதே!

ஆமாம்! ஆனால் சில்லறை வர்த்தகத்தில் கொண்டு வந்தது போல் அரசு அறிவிக்கை மூலம் 
இதனை அமலாக்க முடியாது.ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஐ.ஆர்.டி.ஏ சட்டம் நிறைவேறும்போது 26 % என்பது சட்டத்தின் ஒரு பகுதியாகவே சேர்க்கப் பட்டது. எனவே அதை மாற்றவேண்டுமெனில் நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும். குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.

* அப்போது ஏன் 26 % என்ற வரையறையை போட்டுவிட்டு இப்போது மாற்றுகிறார்கள்?

அவர்களின் விருப்பம் அப்போதும் முழுமையாக திறந்துவிட வேண்டுமென்பதுதான். 1994 ல் 
மல்கோத்ரா அறிக்கை அப்படிதான் சொன்னது. இன்சூரன்ஸ் தொழிற்சங்க இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த 26 % என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்கள். ஒட்டகம் கூடாரத்தில் மூக்கை அப்போது நுழைத்துக் கொண்டது.இப்போது 49 சதவீதம் ஆக்க முயற்சிக்கிறார்கள். இப்போது விட்டுவிட்டால் சில ஆண்டுகள் கழித்து 74 சதவீதம் என்பார்கள்.
அப்புறம் கூடாரத்தில் ஒட்டகத்திற்கு மட்டுமே இடம் இருக்கும்.

* இந்திய இன்சூரன்ஸ் துறைக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுவதால் இப்படி அந்நிய முதலீட்டு வரம்பை உயரத்துவதாகச் சொல்கிறார்களே!

 ஏற்கனவே இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ள 23 தனியார் கம்பெனிகளில் ரூ 23656 கோடி முதலீடுகளை இந்தியத் தனியார்கள் போட்டிருக்கிறார்கள். ரூ 6100 கோடிகளைத்தான் அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இந்தத் தொகையை கொண்டு வருவதற்கானசக்தி இந்திய தனியார்களுக்கே உள்ளது. இந்தியத் தனியார்கள் வெளிநாடுகளில் போய் இதை விட பன்மடங்கு முதலீடுகளைச் செய்து கொண்டு
இருக்கும் வேலை இது. டாட்டா , கோரஸ் நிறுவனத்தை வாங்கியதைப் போல் இந்தியத் தனியார் பல்லாயிரம் கோடிகளை அந்நிய மண்ணில் முதலீடுகளாய் கொட்ட முடியும்போது இன்சூரன்ஸ் துறைக்கு கூடுதல் முதலீட்டிற்காக அவர்கள் ஏன் அந்நிய நிறுவனங்களை நாட வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படியே இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீடுகளைக் காட்டிலும் இங்கே இருந்து வெளியே போவதுதான் அதிகம். 

* அப்புறம் எதற்கு இந்தியத் தொழிலதிபர்கள்  அந்நிய முதலீடு அதிகரிப்பை கோர வேண்டும்?

உண்மையில் 26 சதவீதம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் அண்மைக் காலம் வரை அந்நிய முதலீடு ஒரு பைசா கூட இல்லாமல்தான் தொழில் நடத்தி வந்தார்கள். ஜப்பானின் நிப்பான் கம்பெனிக்கு கடந்த ஆகஸ்ட் 2011 ல் தான் 26 சதவீதத்தை விற்றார்கள். இப்படி விற்கும்போது அவர்களின் பங்குகள் நல்ல விலைக்கு போய் லாபம் கிடைப்பதால் அந்நிய முதலீடு அதிகரிப்பை வரவேற்கிறார்கள்.

* இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் வரும் என்கிறார்களே!

இந்த பத்தாண்டுகளில் 26 சதவீதம் வைத்திருக்கிறார்களே! என்ன அனுபவம்! அவர்களின் வணிகம் எல்லாம் பங்குச் சந்தையோடு இணைக்கப்பட்ட திட்டங்களை நோக்கியே உள்ளது. ஆனால் எல்.ஐ.சி 11 வது ஐந்தாண்டு திட்டக் காலமான 2007 - 2012 ல் ரூ 704151 கோடி ரூபாய்களை அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்காகவழங்கியுள்ளது. வெறும் ரூ 5 கோடிதான் அரசு மூலதனம். அதுவும் 1956 ல் போட்டது. அதற்குப் பிறகு ஒரு ருபாய் கூட போடவில்லை. இப்படி ஒரு வெற்றிக் கதை வேறு எங்காவது உண்டா! இதை வலுப்படுத்துவதை 
விட்டுவிட்டு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் ஏன்!

* பாலிசி தாரர்களுக்கு நல்லது என்கிறார்களே!

இவர்கள் லட்சணத்தை அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பார்த்தோமே. 2008 உலக நிதி நெருக்கடியில் எத்தனை நிறுவனங்கள் திவால் ஆயின. இங்கே டாட்டாவுடன் இணைந்து தொழில் செய்கிற ஏ.ஐ.ஜி கம்பெனி அமெரிக்காவில் திவாலின் விளிம்பு வரை போனதே! இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக என்ன இன்சூரன்ஸ் திட்டத்தைத் 
தந்திருக்கிறார்கள்? எல்.ஐ.சி யில் ஒன்றே கால் (1 .22 ) சதவீத இறப்பு உரிமங்களும், அரை சதவீத (0 .5 ) முதிர்வு உரிமங்களுமே 2010 -11 நிலுவையில் இருந்தன. டாட்டா-ஏ.ஐ.ஜி யில் நிலுவை உரிமங்கள் 18 சதவீதம். ரிலையன்ஸ் லைப் கம்பெனியிலும் 18 சதவீதம். நியூ யார்க் லைப் நிறுவனத்தில் 22 சதவீதம். சில தனியார் நிறுவனங்களில் 40 சதவீதம் 
கூட இருந்திருக்கிறது.

* ஐ.ஆர்.டி.ஏ சேர்மன், அந்நிய முதலீடு அதிகரிப்பு தேவை என்று சொல்லியிருப்பதை நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக் காண்பித்து இருக்கிறாரே!

அவர்கள் வளர்க்கிற கிளி அவர்கள் சொல்வதைத்தானே ஒப்பிக்கும்! நாடாளுமன்ற நிலைக் குழு இம்மசோதாவை பரிசீலித்து ஒருமித்த குரலில் அந்நிய முதலீடு அதிகரிப்பு கூடாது என்று சொல்லியிருக்கிறதே. அக்குழுவில் காங்கிரஸ் எம்.பி க்களும் இருந்திருக்கிறார்களே! எல்லாக் கட்சி எம்.பி க்களும் ஒரே குரலில் சொல்வதை விட்டுவிட்டு எனது செல்லக் கிளி சொல்கிறதே 
என்றால் என்ன ஜனநாயகம்! 

No comments:

Post a Comment