Monday, December 26, 2011

VENMANI CONVENTION- DEC 25,2011- DINAMANI DAILY-TRICHY EDITION

"ஒடுக்கப்பட்டோர் மீதான கொடுமைகள் ஓயவில்லை' First Published : 26 Dec 2011 01:32:27 PM IST திருவாரூர், டிச. 25: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் என ஒடுக்கப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஓயவில்லை என்றார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பி. சண்முகம். தென் மண்டல காப்பீட்டுத் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வெண்மணி தியாகிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சி திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென் மண்டல காப்பீட்டுத் துறை ஊழியர் சங்க துணைத் தலைவர் ஆர். தர்மலிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பி. சண்முகம் ஆற்றிய சிறப்புரை: வாச்சாத்தியில் நடைபெற்ற வன்கொடுமைக்கு 19 ஆண்டுகள் கழித்து நல்ல தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கில் தாமதமாக தீர்ப்பு வந்தாலும், நியாயமாக, குற்றச்சாட்டப்பட்டு இறந்தவர்களும் குற்றவாளிகள்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் ஒரு வழக்கில் இத்தனை அரசுத் துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகள் என அதிக எண்ணிக்கையிலானோர் தண்டனை பெற்றிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும். வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு வெளிவந்தவுடன் இதுபோன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென எண்ணினோம். ஆனால் அதன் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் 4 பெண்கள் காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதுவரையில் நால்வரும் கைது செய்யப்படவில்லை. தலித் மக்கள் மீதான இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் சண்முகம். நிகழ்ச்சியில் தென் மண்டல காப்பீட்டுத் துறை ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் க. சுவாமிநாதன், சேலம் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்க உதவிப் பொருளர் சி. கிருத்திகா பிரபா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட காப்பீட்டுத் துறை ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர், அனைவரும் நாகை மாவட்டம், கீழவெண்மணிக்குச் சென்று அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1 comment:

  1. கலைஞர் தொலைக்காட்சியிலும் கருத்தரங்கை ஒளிபரப்பு செய்ததாக தோழர்கள் கூறினர்.

    ReplyDelete