க.சுவாமிநாதன்
தொலைக் காட்சிகளில் மன்மோகன் சிங் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவது பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுத்துவிட்டார். பிரதமர், பெரிய பொருளாதார நிபுணர், அவருக்கு தெரியாததா? என்று படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் சில பேர் எந்தச் சம்பளமும் வாங்காமல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள். ஆனால் மன்மோகன்சிங் வார்த்தைகளில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்று அவரின் இணை பிரியாத சகா, உலக வங்கி கொடுத்த உறவுக் காரர் மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் கேட்டுப் பார்ப்போமா!
2002 டிசம்பர் 19 அன்று இதே மன்மோகன்சிங் (நாம் இதை சொல்லாவிட்டால் அது அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று கூட சொல்லுவார்கள்) நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர். அப்போது சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என்று பேசியிருக்கிறார். பிறகு மும்பை வர்த்தகர் சங்கத்திற்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கடமை உணர்வோடு கடிதமும் எழுதியுள்ளார். இவர் மட்டுமல்ல 2001 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா தாஸ் முன்சி சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு "தேச விரோதம்" என்று முழங்கியிருக்கிறார். இன்றைய அமைச்சர் கமல்நாத்தும் உணர்ச்சி பொங்க எதிர்த்திருக்கிறார். மன்மோகன் சிங்கே இப்படி பேசி இருக்கிறாரே ? என்று செய்தியாளர்கள் அலுவாலியாவிடம் கேட்டபோது " ஒவ்வொரு ஆளும் எப்போது என்ன பேசுகிறார் என்று என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வர இயலாது " என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை. வடிவேல் பாணியில் இது வேற வாய் என்றுதானே அலுவாலியா சொல்லுகிறார். இன்னும் பத்து வருசம் கழித்து எந்த வாய் பேசுமோ நமக்கு தெரியாது.
யாருக்கு லாபம்!
சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம்! யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌரவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும்? ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும்! இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும்! ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே! அதனால்தான் சிறு வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.
இது என்ன ஜனநாயகம்!
போன நவம்பர் 2011 ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன! ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே!
இப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது! ஆளுங்கட்சியை உள்ளே இருந்து ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது. இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் " சிறுவணிகத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப் பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல"
இப்படி யாரையுமே ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன ஜனநாயகம்! 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது.
உலக அனுபவம் என்ன ?
உலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங் அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிற விளைவுகளை பார்க்க வேண்டாமா? தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது "இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் "இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது!" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா? பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை.
விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் ?
இரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன? அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன? இதோ பிரிட்டன் ராயல் பால் உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம் கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம் 2008 இல் "மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன. நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன" என்று செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை.
நுகர்வோருக்கும் ஆப்பு
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி "கவனமாக இருங்கள். சில்லறை வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது சாமானிய மக்களுக்கு நல்லதல்ல" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி - 2012 அறிக்கையின் படி "பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள் ஏற்றப்படுகின்றன" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன் ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன? ஆனால் அலுவாலியா சொல்லுகிறார். இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான். ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம். இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம். இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான் நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்?
கூடாரத்திற்குள் ஒட்டகம்
10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான் தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே கூடாரத்திற்க்குள் மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும், விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில் தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள் போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும், மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும் மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால் அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம் வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.
ஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.
ஓரம் போகப் போகிறோமா! ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா!
- இளைஞர் முழக்கம் இதழுக்காக -
No comments:
Post a Comment