*பெஃபி சுந்தரம் மறைந்தார்*
*செவ்வணக்கம் தோழரே!*
**************************************
*வங்கி ஊழியர் இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமை தோழர் வி.சுந்தரம் இன்று மதுரையில் காலமாகி விட்டார்.*
*அவரது பொது வாழ்வின் துவக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. எழில் என்ற அவரது புனைப் பெயர்தான் வங்கி அரங்கத்திற்கு வெளியே பிரபலமானது. நான் 1985 ல் இராமநாதபுரம் எல்.ஐ.சி யில் சேர்ந்தேன். அதே காலத்தில் அவர் மதுரையை நோக்கி நகர்ந்து விட்டார். அன்றைய முகவை~ சிவகங்கை மாவட்ட சி.பி.எம் மாவட்ட செயலாளர் அருமை தோழர் கருப்புராஜா என்னிடம் சொல்வார். " நடுத்தர வர்க்க தொழிற்சங்க ஊழியர்களுக்கு முன்னுதாரணம் தோழர் எழில்". அந்த அளவிற்கு சாதாரண மக்களோடு ஊடாடியவர். உரையாடியவர். அவர்களின் ஆசிரியராக திகழ்ந்தவர். பொதுவுடைமை, முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து அவர் ஆற்றிய பங்கை பலரும் என்னோடு பேசினார்கள். அவரை பார்க்காமலே அவரைப் பற்றிய சித்திரம் எனது மனதில் குடி கொண்டது.*
*ஆனால் அவரை முதலில் நான் பார்த்தது வங்கி தொழிற்சங்க தலைவராகவே.* *அவரை ஓர் கலந்துரையாடலுக்காக*
*இராமநாதபுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் அழைத்திருந்தோம். அதில் அவருக்கு அளிக்கப்படட தலைப்பு "ஊதியக் கட்டமைப்பின் அடிப்படை கணக்கீடுகள்" என்பதாகும். Merger, Revision element, Neutralization... இப்படி பல வார்த்தைகளுக்கான பொருளை எளிமையான கணக்கீடுகள் மூலமாக அந்த சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். பஞ்சப்படி ஈட்டிற்கான சதவீதம் அடிப்படை ஊதிய நிர்ணயத்திக்கேற்றாற் போல் எப்படி மாற்றி அமைக்கப்படும் என்று விளக்கினார். இன்று வரையிலும் ஓர் ஊதிய உயர்வு உடன் பாட்டை அணுகும் போது 1988 ன் அந்த சந்திப்பு மனதில் வந்து நிற்கும். என் நினைவில் அந்த சந்திப்பில் திருச்சி ஜெயசீலன் ( எல்.ஐ.சி), எழுத்தாளர் சி.சுப்பாராவ் (மதுரை) ஆகியோர் இருந்தனர். இத் தோழர்களும் அச் சந்திப்பை அடிக்கடி நினைவு கூறுவார்கள். ஒரு கூட்டம், ஒரு சந்திப்பு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலுமென்பதற்கு அவரின் ஆழமான அறிவாற்றலே காரணம்.*
*நான் மதுரைக்கு 1989 ல் மாற்றலாகி வருகிறேன். அதற்குப் பின்னரே அவரோடு நெருக்கமான தொடர்பு. என்ன அற்புதமான மனிதர்! தன்னுணர்வு மேலோங்காமல் பொது வாழ்வின் இலக்கணத்திற்கு உட்பட்டு வாழ்க்கையை நடத்திய பண்பு. அவரிடம் பழகுவதே பயிற்சி.*
*மதுரை இன்சூரன்ஸ் தோழர்களோடு அவரது நெருக்கம் அதிகம். 1990 களில் மதுரை செல்லூர் ஆர்.எஸ்.நாயுடு தெருவில் இன்சூரன்ஸ் சங்க அலுவலகம். அங்கு ஐந்து, ஆறு முன்னணி தோழர்கள் அமர்ந்து வாரம் தோறும் ஏதாவது தலைப்பில் விவாதிப்போம். தோழர்கள் சிவசுப்ரமணியம், பவள வண்ணன், பால் டேவிட் ஆகியோர் அமர்வோம். தோழர் சுந்தரம் நெறியாளராக வந்து வழிகாட்டியுள்ளார். 179, வடக்கு வெளி வீதியில் பொது இன்சூரன்ஸ் அலுவலக தொழிற்சங்க பயிலரங்குகளில் பங்கேற்று வழிகாட்டியுள்ளார். நிதானமான, ஆரவாரமில்லாத ஆனால் மிக ஆழமான கருத்துக்கள் என்னைப் போன்ற பலரை முன்னணி ஊழியர்களாக வார்த்தெடுக்க உதவியது.*
*சுந்தரம் என்கிற பறவை புதிய உயரங்களை தொட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாவட்டக் குழு செயலாளராக உயர்ந்தார். "பெஃபி" என்கிற அடையாளம் இன்று வரை அவருக்கு உண்டு. ஆனாலும் அவர் அந்த வரையறைகளை மீறிய தலைவராக மலர்ந்து விட்டார். இது பெஃபிக்கும் பெருமையே.*
*உத்தப்புரம் தீண்டாமை சுவர் குறித்த கள ஆய்வு அறிக்கையின் முதல் நகலை சி.பி.எம் மாவட்ட செயலாளர் என்ற முறையில் அவர்தான் பார்த்தார். சுவர் பற்றிய குறிப்பை பார்த்ததும் அதிர்ந்து போனார். உடனே அந்த பகுதி தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். அச் செய்தி உறுதி செய்யப்பட்டவுடன் அவர் முகத்தில் தெரிந்த வேதனை இன்னும் என் கண்களில் நிற்கிறது. அது போன்று அவர் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்திய சூழ்நிலைமைகள் மிக அரிது.*
*மதுரை தீண்டாமைக் கள ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஜவஹர் அவர்களிடம் இரவு 11 மணி வாக்கில் தோழர்கள் பி.சம்பத், பி.மோகன் எம்.பி, வி சுந்தரம் அவர்களோடு இணைந்து நானும் சேர்ந்து அளித்தோம். அப் பிரச்சினையில் அவரது தலையீடும், வழிகாட்டலும் உத்தப்புரத்தை உலகறிய செய்ததில் உண்டு. இதில் அவரது பங்கு அதிகம் பேசப்படாதது. அவர் தன்னை வெளிப்படுத்தாமல் கூட்டு செயல்பாட்டில் கரைந்து விடுவதற்கு சாட்சியம் அது.*
*தேர்தல் நேரங்களில் சவால்கள் நிறைந்த சூழல்களை அவர் எதிர்கொண்டிருக்கிறார். ஓர் நடுத்தர வர்க்க பின் புலத்தைக் கடந்த உறுதியை நான் கண்டிருக்கிறேன்.*
*உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்னரும் அவர் பொது வாழ்வு தொடர்ந்தது. தீக்கதிரில் பணியாற்றினார். எங்கள் சந்திப்பு குறைந்தாலும் பார்க்கிற இடங்களில் பாசத்தை பொழிவார். முகத்தில், பாவத்தில், உடல் மொழியில் வெளிப்படுத்தாமல் அவரின் நெருக்கத்தை எப்படி உணரச் செய்கிறார் என்பது இன்னும் எனக்கு புரியாத புதிர். தல்லாகுளத்தில் குடியிருந்த போதும், தேனி சாலைக்கு அருகில் வந்த பிறகும் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளேன். எளிமையான வாழ்க்கை அது*
*தோழர் சு.வெங்கடேசன் தனது படைப்பு ஒன்றை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்ததை கண்ட போது நெகிழ்ந்து போனேன்.*
*இப்படி பல பேரின் அன்பை பெற்றவர். மரியாதைக்குரியவர். அவர் எத்தனையோ சிறப்பான வகுப்புகளை எடுத்திருக்கிறார். எல்லாவற்றிலும் சிறப்பான வகுப்பு அவர் வாழ்ந்து காட்டியதுதான்.*
*செவ்வணக்கம் தோழர் சுந்தரம்.*