Tuesday, January 27, 2015

AIIEA's Senior Leader Com R Govindarajan - 80th birthday on 25th Jan 2015

   

அன்புகெழுமிய ஆர்.ஜி அவர்களே!

80 வயது...
எண்ண முடிவது
ஆண்டுகளைத்தான்..

ஆர்.ஜி கடந்த தூரங்கள்

கால்பட்ட ஊர்கள்
பேசிய கூட்டங்கள்
வெளிப்பட்ட வார்த்தைகள்...
இவற்றையெல்லாம்
எப்படி எண்ணுவது?
இந்தியா முழுவதும் ஒலித்த குரல்..
பொருள் அல்ல வாழ்வின் இலக்கு
வாழ்வதில் பொருள் இருப்பதே சிறப்பு
யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..
இப்படி நகர்ந்த பயணம் அது!
தஞ்சையில் இருந்து சென்னைக்கு
அவரின் குடிபெயர்வு
ஈர்த்தது இயக்கமே.. இயக்கத்திற்காகவே...
உலகமயம் தேசியம் மதம் சாதி
எல்லாப் பொருளிலும்
இருளைக் கிழிக்கிற விளக்காய்
ஆர்.ஜியின் வகுப்புகள்
செதுக்கிய சொற்கள்
எண்ணற்ற தீபங்களை
ஏற்றிய சுடராய்
வாசிப்பின் அடையாளம்
மொழி ஆளுமைக்கு உதாரணம்
கம்பனில் துவங்கி
புதுக்கவிதைகள் தொடர்ந்து
காசு...துட்டு... மனி மனி... வரை
எடுத்துக் கையாளும் லாவகம்
பகிர்வதில் கிட்டும் பரவசம்
தொடர்கிறது அவரின் பயணங்கள்
இடதுசாரி பாதையில்..
ஆண்டுகளில் இல்லை வயது
அனுபவங்களின் திரட்சியில்
நூறைக் கடந்தவர்..
பொது வாழ்வுக்கான உறுதியில்
இன்னும் இருபது..
ஆர்.ஜி
உங்களின் விரல்கள் போதாது
பற்றி நடக்க பல பேர் இருப்பதால்..
இதுவே வாழ்வின் பொருள்
நீங்கள் ஈட்டிய செல்வம்

Saturday, January 17, 2015

மீண்டும் தூத்துக்குடி முன்னுதாரணமாய் ...


திருவள்ளுவர் தினத்தில் 133 அடி நீள பேனரில் 5000 பொது மக்கள் கையெழுத்து ...

வ.உ.சி பிறந்தநாள் அன்று (செப்டம்பர் 5) அன்னியமுதலீட்டிற்கு எதிராக நகர வர்த்தகர்கள், சகோதர அமைப்புகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தூத்துக்குடி காப்பீட்டுக் கழக சங்கம் நடத்தியது. சுதேசிக் கப்பலை ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு சவாலாக விளங்கிய அம்மாமனிதரின் பிறந்த நாளில் பன்னாட்டு மூலதனத்திற்கு எதிராக நடந்தேறிய இப்போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது, பெரும் ஆதரவையும் பெற்றது.



இதோ மீண்டும் ஜனவரி 16 ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று மக்கள் மத்தியில்... 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளை இயற்றிய அய்யனின் நினைவைக் கொண்டாடுகிற நாள் அல்லவா... தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் 133 அடி நீள பேனரில் அந்நிய முதலீட்டு அவசரச் சட்டத்திற்கு எதிராகவும், பொதுத்துறை இன்சூரன்ஸை பாதுகாப்பதற்குமான கோரிக்கைகளுடன் எல்.ஐ.சி ஊழியர்கள் ... சமுக ஆர்வலர் நெய்தல் ஆண்டோ முதல் கையெழுத்தை போட காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை குவிந்தன 5000 பொதுமக்களின் கையெழுத்துக்கள்...திருநெல்வேலிக் கோட்டச் சங்கத் தலைவர் மதுபால், பொதுச் செயலாளர் செ. முத்துக் குமாரசாமி, துணைத் தலைவர் சேகர், கிளைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் , ஆர்.ஜவகர் ( எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரிகள் சங்கம்)            இ . முருகன் (எல்.ஐ.சி முகவர் சங்கம்) மற்றும் வின்சென்ட் உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் தலைவர்களின் பங்கேற்போடு..பொங்கல் விடுமுறையில் ஒரு நாள் முழுவதும் வீதிகளில் நின்று மக்களை ஈர்த்த முன்முயற்சியை எப்படிப் பாராட்டுவது!

புதிய புதிய வடிவங்களில் மண்ணின் மணத்தோடு மக்களின் உள்ளங்களை எப்படி தொட முடியும் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார்கள் தூத்துக்குடி எல்.ஐ.சி ஊழியர்கள்.