பொன்விழா நிறைவு புதிய துவக்கமாய் அமையட்டும்
அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெருமைமிகு கோட்டச்
சங்கங்களில் ஒன்றான தஞ்சாவூர் தனது பொன்விழா ஆண்டை நிறைவு
செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதாகும்.
புதிய புதிய முன்முயற்சிகளுக்கும், திருப்புமுனைகளுக்கும் வழிவகுக்கிற
சாதனைகளுக்கு விளைநிலமாக தஞ்சாவூர் திகழ்ந்திருக்கிறது.
அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மணிமகுடமாகத் திகழ்கிற
1960 களில் நடைபெற்ற பொறிமயமாக்கல் எதிர்ப்பு போராட்டம் கொல்கத்தா
நகரில் பற்றிப்பரவுவதற்கு தீப்பந்தத்தை ஏந்திக் கொடுத்த பெருமை தஞ்சை
மண்ணுக்கு உண்டு. தஞ்சைக் கோட்டத்தின் உருவாக்கத் தலைவர்களில்
முதன்மையானவரான தோழர் ஆர். நாராயணன் போன்றவர்களின் குரல்கள்
மும்பை மைய அலுவலகம் முன்பாக வரை ஒலித்திருக்கிறது என்பது வரலாறு.
1990 களில் பேசப்பட்டவையாக இரண்டு கையெழுத்து இயக்கங்கள் அமைந்தன.
முதல் பந்திலேயே சிக்ஸர் போன்று தஞ்சைக் கோட்டம் திருவையாறு இசைவிழாவில்
பெருந்திரள் மக்களிடம் கையெழுத்துக்களைப் பெறத் துவங்கியபின்னர்தான்
தமிழகக் கோட்டங்கள் எல்லாம் வீதிகளுக்கு விரைந்தன. எத்தனை நாட்கள்..லட்சக்
கணக்கான மக்களுடன் சந்திப்பு. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைப்
பாதுகாக்கிற மாபெரும் வேள்வியாக அது மாற்றப்பட்டது எனில் அதன் கனல்
புறப்பட்ட இடமாக தஞ்சைக் கோட்டம் இருந்தது.
தொழிற்சங்கக் கல்வி, மாணவர்களை அழைப்பதாக மட்டும் அல்லாமல் அவர்களின்
கதவுகளைத் தட்டுவதாக மாற்றப்படுவதிலும் தஞ்சைக் கோட்டம் முதல் புள்ளியை
வைத்தது. கிளை அளவிலான தொழிற்சங்க வகுப்பு என்கிற புதிய முயற்சியை பிற
கோட்டங்களுக்கு அறிமுகம் செய்தது. ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களின் தகவல்
தொடர்பு பிரச்சாரச் சாதனங்களும் பிரமாண்ட வளர்ச்சியோடு கருத்துருவாக்க தளத்தை
ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கடந்த 20 ஆண்டுகளில் பொதுத் துறை பாதுகாப்பு,
விரிந்த போராட்டத்தில் ஊழியர்களை ஈடுபடுத்தல், சமுகத்தில் இருந்து தனிமனிதனை
பிரிக்கிற கலாச்சாரத்திற்கு எதிர்வினை என AIIEA முன்னேற முனைந்திருக்கிறது எனில்
அதில் பெரும்பங்கை தொழிற்சங்கக் கல்வியே வகித்திருக்கிறது. இவ்வழி நடத்தலில்
தஞ்சை மிக முக்கிய முடிவை காலம் தவறாது எடுத்தது.
இவ்வரலாற்று பாதையில் இன்னொரு மிக முக்கியமான மைல் கல்லாக அமைந்திருப்பது
மகளிர் கலைக் குழு உருவாக்கம் ஆகும்.தமிழ்நாடு முழுவதும் மகளிர் இயக்கத்திற்கு
புதிய திசையை தஞ்சை மகளிர் காட்டியிருக்கிறார்கள். ஜனவரி 26 அன்று சேலம் மாநகரம்
கண்ட மாநிலம் தழுவிய மகளிர் கலைவிழாவுக்கான விதையாகத் தஞ்சாவூரே திகழ்ந்திருக்கிறது. அதுபோன்று டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு மையத்தை 5 மையங்களில் உருவாக்கி வங்கித் தேர்வுக்கான பயிற்சியை அளித்த அண்மைய செயல்பாடும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தஞ்சாவூர்க் கோட்டத்தின் முன்முயற்சிகளைப் பட்டியல் இட்டால் அது நீண்டுகொண்டே செல்லும். ஆனால் நீள்கிற வரலாற்றின் கண்ணிகள் எங்கும் தொய்யாது, விடுபடாது அடுத்தடுத்த தலைமுறையால் பாதுகாக்கப்படுவது பெருமைக்கு உரியதாகும். தோழர் ஆர்.கோவிந்தராஜன், தோழர் கே.இலக்குவன், எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கருப்பையா போன்ற மூத்த தலைவர்களின்
பாரம்பரியம் இன்றைக்கும் உயிர்ப்போடும், உணர்வு பூர்வமானதாகவும் தொடர்கிறது.
தஞ்சை மண்ணை வளமாக்குகிற காவிரி நதியை விவசாயப்பெருங்குடி மக்கள் தங்கள் இதயத்திற்கு நெருக்கமாய் வைத்திருப்பது போல் தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கமும் இன்சூரன்ஸ் ஊழியர் நெஞ்சங்களில் என்றென்றும் குடியிருக்கும்.
பொன்விழா நிறைவில் இன்னும் எந்த புதிய துவக்கத்தை தஞ்சை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு,