Friday, March 21, 2014

கோவில்களும் கோடாலிகளும்...



நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் களம் சூடு பிடித்துள்ள நேரம். மக்களின் வாழ்நிலைப் பிரச்சினைகள் இப்பிரச்சாரத்தில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதில் கார்பரேட் ஊடகங்களும்,மோடி-ராகுல் பிரச்சாரகர்களும் கவனமாக உள்ளனர். விலைவாசி- அந்நிய முதலீடு-பொதுத்துறை போன்ற முக்கியமான அம்சங்கள் மீது நுனிப்புல் விவாதங்களைக் கூட இவர்கள் நடத்துவதில்லை.

பொதுத்துறை மீது புதிய அரசு என்ன அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்பதில் இடதுசாரிகளைத் தவிர யாரும் திட்டவட்டமாக கருத்து கூறுவதில்லை. அப்படியே சிலர்சொன்னாலும் அதை நம்புவதற்கு அவர்களின் கடந்தகாலம் இடம் கொடுப்பதாக இல்லை. 

தேர்தல் துவங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டது. சிதம்பரம், வாசன் போன்றவர்கள் தேர்தலில் தமிழகத்தில் நிற்கவே தயங்குகிறார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றன. மாற்றம் நிச்சயம்... மாற்றும் அவசியம் எனும்போது பொருளியல் பாதை பற்றிய விவாதம் தேவைப்படுகிறது.

பொதுத்துறையின் வரலாறு

1954, ஜூலை 7- சட்லெஜ் நதியின் குறுக்கே இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ரா -நங்கலின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள். அவ்விழாவில் அன்றைய இந்தியப்பிரதமர் ஜவகர்லால் நேரு அந்த அணையை ' நவ இந்தியாவின் நவீனத் திருக்கோவில்கள் ' என்று வர்ணித்தார். இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், தேச கட்டுமானத்திற்கு அரசின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு அவர் வைத்த பெயர் அது. 

ஏன் பொதுத்துறை உருவாக்கப்பட்டது? இந்திய ஆட்சியாளர்கள் விரும்பி உருவாக்கினார்களா? சுதந்தர இந்தியாவின் சுயசார்பான வளர்ச்சிக்கு ஏன் அவை அவசியமாயின?இப்படிஇந்தியாவில் பொதுத்துறை வாயிலாக வளர்ச்சியை திட்டமிடுவதற்கு முன்பாக அமெரிக்காவின், பிரிட்டனின் கதவுகளைத் தட்டியபோது அவை திறந்தனவா? என்பதெல்லாம் தனிக்கதை. மேலை நாடுகள் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இல்லை. இந்தியத் தொழிலதிபர்களின் கைகளிலும் பெரிய கனரகத் தொழில்களை உருவாக்குகிற நிதிபலம் இல்லை. சுதந்திர எழுச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. கம்யுனிஸ்டுகளின் தொடர்ந்த போராட்டங்கள், கருத்துருவாக்கம் ஆகியவற்றையும்ஆளும் வர்க்கங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே "சிசேரியன்" பிரசவம் போல பொதுத்துறை பிறந்தது. ஆனால் பொதுத்துறை உருவாக்கம் இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மகத்தானது.

1948 ல் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் (I.T.I ) சுதந்தரத்திற்குப் பிந்தைய முதல் பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது. முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் 5 பொதுத்துறைநிறுவனங்களே இருந்தன. ஆனால் இன்று 404 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களும்,1062 மாநில அரசு நிறுவனங்களும் உள்ளன. ராஞ்சி, பிலாய்,துர்காபூர், ரூர்கேலா போன்றநகரங்களே கூட பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியால் உருவாயின. தமிழகத்தின் நெய்வேலி போன்று நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1956 ல் மிகப் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வந்த 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு எல்.ஐ.சி உருவாக்கப்பட்டது. அதற்குப்  பின்னரே இன்சூரன்ஸ் பயன்கள் சேரிகளுக்கும், கிராமங்களுக்கும், அடித்தள உழைப்பாளிகளுக்கும் தேடித் தேடிப்  போய்ச் சேர்ந்தன. 1969 ல் வங்கிகள் தேசியமயமான பின்னர் கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள்திறக்கப்பட்டன. திவால்கள் பழங்கதை ஆகிப் போயின. 

மிகப்பெரிய நம்பர் ஒன் உருக்கு நிறுவனமான "ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா" (SAIL), இந்தியாவில்  அதிக லாபம் ஈட்டுகிற முதன்மை நிறுவனமான  "எண்ணெய் மற்றும் இயற்கை வாயுஆணையம்" (ONGC) மிகப்பெரும் வணிக நிறுவனமாய் திகழும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC) போன்ற பெருமைமிக்க நிறுவனங்கள் எல்லாம் பொதுத்துறை நிறுவனங்களே!

ஆனால் சுயசார்புச் சக்கரம் 1991 முதல் பின்னோக்கிச் சுழலத் துவங்கியது. நவீனத் திருக்கோவில்கள் என்று நேருவால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடும் தாக்குதலுக்குஆளாகின. கோவில்களில் பிரசாதம் கிடைக்கும். ஆனால் கோவில்களே பிரசாதமாக மாற்றப்பட்டன. ஆம்.பொதுத்துறை நிறுவனங்கள் பன்னாட்டு மூலதனத்திற்கும், இந்தியப் பெரும்தொழிலகங்களுக்கும் படையலாக பரிமாறப்பட்டன.


விதம் விதமா விற்பனை 

1991 லிருந்து பொதுத்துறை பங்கு விற்பனைக்கு விதம் விதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. கேந்திர விற்பனை, தனியாருக்கு பெரும்பான்மை பங்குகள், பெரும்பான்மை பங்குகளை அரசின் கைகளில் வைத்து கொண்டு மீதத்தை விற்பது, கட்டுப்பாடுகளுடன் பங்கு விற்பனை... இப்படி அரசின் பலத்திற்கேற்ப, எதிர்ப்பின் அளவுக்கேற்ப சாதுர்யமாக,லாவகமாக கொள்கைகள் வகுக்கப் பட்டன. கேந்திர விற்பனை என்றால் ஒரே அடியில் தனியாருக்கு கை மாற்றுவது ஆகும். இப்படி வி.எஸ்.என்.எல் நிறுவனம் டாட்டாவுக்கு கைமாறியது. மாடர்ன் புட்ஸ், சென்டார் ஓட்டல், பால்கோ எனப் பட்டியல் நீளும். இது . கேந்திர விற்பனை என்பது சயனைடு குப்பி மூலம் இன்ஸ்டன்ட் ஆகக் கொல்வது போன்றது. மற்றவகை பங்கு விற்பனைகள் எல்லாம் மூட்டைப் பூச்சி மருந்துமூலம் கொஞ்சம் மெல்ல மெல்ல உயிர் பறிக்கப்படுவது போன்றது. 

1991 லிருந்து 2013 வரை ரூ 136930 கோடி பெறுமான பங்குகள் விற்கப்பட்டன. 2000-2004 வரை ரூ 23034 கோடி, 2004-2008 வரை ரூ 8516 கோடி, 2009-2013 வரை 84208 கோடி. எந்தந்த ஆண்டுகளில் எவ்வளவு பங்கு விற்கப்பட்டது என்பதை உன்னிப்பாக பார்த்தால் பேரன்களின் திருவிளையாடல்களும், கடப்பாரைகளின் நர்த்தனமும் தெரிய வரும். யார் பொதுத்துறை பாதுகாப்பில் உறுதியாக இருந்தார்கள் என்பதும் தெளிவாகும். 

நரசிம்மராவ் ஆட்சியே தனியார்மயத்திற்கு கதவுகள் திறக்கப்பட்ட காலம். 1992-93 ல் 20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டன. நஷ்டம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது அப்போதே அம்பலமாகிப் போனது. 1992-98 க்கு இடைப்பட்ட 7 ஆண்டு காலத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் 21 சதவீதம். இதே காலத்தில் தனியார்நிறுவனங்களின் லாபம் 15 சதவீதமே ஆகும். மாருதி சுசுகி அன்னியர் கைகளுக்கே போனதும் இக்காலமே.

2000-2004 ஆண்டுகள் பி.ஜே.பியின் ஆட்சியில் இந்தியா 'ஒளிர்ந்த' காலம். அப்போதுதான் வி.எஸ்.என்.எல் போன்ற 9 பொதுத்துறை நிறுவனங்கள் ஐ.டி.டி.சியின் 18 ஓட்டல்கள் கேந்திரவிற்பனை  மூலம் தனியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பொதுத்துறையை விற்பதற்கென்று தனி அமைச்சரை நியமித்த பெருமையும் பி.ஜே.பி க்கு உண்டு. அமைச்சர் அருண் சௌரி பங்குவிற்பனை இலாக்காவின் முதல் அமைச்சராகவும், கடைசி அமைச்சராகவும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். கடைசி அமைச்சராகவும் மாறியதற்கு காரணம். கேந்திர விற்பனையில் மக்களின் பணம் பாழாகி விட்டதென்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெடித்ததே ஆகும்.

ஜனவரி, 2002ல் மும்பை உள்நாட்டு விமான முனையம் அருகில் இருந்த 288 அறைகளைக் கொண்ட சென்ட்டார் ஓட்டலை ரூ 83 கோடிகளுக்கு பி.ஜே.பி அரசு விட்டது. அதை வாங்கிய பத்ரா ஹாஸ்பிடாலிடி தொழிலே நடத்தாமல் "சூடா ஒரு ஸ்பெசல் தோசை " மாதிரி நான்கே மாதங்களில் ரூ 115 கோடிகளுக்கு சகாரா நிறுவனத்திற்கு ஓட்டலை விற்று விட்டது. ரூ 5000 கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கொண்ட பால்கோ நிறுவனத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரூ551 கோடிகளுக்கு விற்றது. இந்த பால்கோ நிறுவனம் "அக்னி" "பிருத்வி" ஏவுகணைகளை தயாரிக்க உதவிய அலுமினிய நிறுவனம். இன்று ஜவானும் பாதுகாப்பாக இல்லை, கிசானும்பாதுகாப்பாக இல்லை என்று வசனம் பேசுகிற மோடியின் பி.ஜே.பி மத்தியில் ஆட்சி செய்த காலத்தில்தான் ஏவுகணைகளைத் தயாரிக்க உதவிய பால்கோ நிறுவனப் பங்குகள் சூறை விடப்பட்டுள்ளன. கிசான்கள் தூக்குகயிறுகளை தேடிய காலமும் அதுவே என்பதும் உண்மை. 

அருண்சோரியோ  பொதுத்துறை பற்றி எவ்வளவு மோசமாக பேசினார் தெரியுமா!  "பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்தினங்கள் அல்ல; அவை ரத்தம் ஒழுகிற குடல் புண்கள்". ஆனால்உண்மையில் பொதுத்துறையின் ரத்தமே குடிக்கப்பட்டது.

2004-2008 காலத்தில்தான் மிகக் குறைவாக பங்கு விற்பனை (ரூ 8516 கோடி)நடந்தேறியுள்ளது. காரணம், இடதுசாரிகள் ஆதரவோடுதான் மத்தியில் ஆட்சி அமைய வேண்டியிருந்தது. 62 இடதுசாரி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கோவர்த்தன மலை போன்று பொதுத்துறைக்கு குடை பிடித்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு -I ஆட்சி வெளியிட்ட தேசிய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் (NCMP) நவரத்தினங்கள் பாதுகாக்கப்படும்; லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. இடதுசாரிகள் ஆட்சியில் பங்கேற்காமல் மக்களுக்கான போராட்ட ஆயுதமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்கள். பொதுத்துறை வங்கிகளின் அரசுப் பங்குகளுக்கான குறைந்த பட்சவரம்பை 51 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைக்கிற மசோதாவைக் கைவிடச் செய்தார்கள். இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவதை தடுத்து நிறுத்தினார்கள். 

2008 உலக நிதி நெருக்கடியில் மேலை நாடுகளில் பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தலை குப்புற கவிழ்ந்தன. ஆனால் இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ்நிறுவனங்களும் - வங்கிகளும் அப்புயலில் நிலை குலையாது நிமிர்ந்து கம்பீரமாக நின்றன. ராகுல் காந்தியோ " எனது பாட்டி இந்திராவும், கொள்ளுதாத்தா நேருவும் வங்கிகளை,இன்சுரன்சை தேசியமயமாக்கியதுதான் இந்திய நிதித்துறை காப்பாற்றப் பட்டதற்கு காரணம்" என்று மார்தட்டிக் கொண்டார். நெஞ்சு குறுகுறுக்காமல் பேசுவதை எப்படி கற்றுக்கொண்டார்களோ!

அறுந்து போன கடிவாளம் 

2009-2013 ல் கடிவாளம் அறுந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு II  ரூ 84208 கோடி பங்குகளை விற்றுள்ளது. இது 23 ஆண்டுகளில் நடந்துள்ள பங்கு விற்பனையில் 61 சதவீதம் ஆகும்.என்.டி.பி.சி, செயில், ஆயில் இந்தியா, எச்.ஏ.எல், நால்கோ, ஐ.ஒ.சி, எம்.எம்.டி.சி என பல நிறுவனங்கள் சந்தைக்கு வந்தன. 

பங்கு விற்பனை மூலமாக மட்டுமின்றி  வங்கித்துறையில்டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் நுழைய வழி வகுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் கைகளாலேயே திறக்கப்பட்ட குளோபல் டிரஸ்ட் பேங்க் கவிழ்ந்ததை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தைரியம்தான். உலக பெரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவால் ஆகியுள்ள நிலையில் இந்திய இன்சூரன்ஸ் துறையில்அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் முயற்சி செய்தார்கள்.

பி.பி.பி என்றழைக்கப்படுகிற அரசு-தனியார் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்க்ப்பட்டன. டெல்லியில் அப்போலோ மருத்துவ மனையோடு இணைந்து டெல்லி அரசு உருவாக்கிய இந்திரபிரஸ்தா மருத்துவ மனைக்கு நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்திலேயே உள்ள 15 ஏக்கர் நிலம் ஓராண்டுக்கு ரூ 1 க்கு லீசுக்கு தரப்பட்டது. டெல்லி அரசு ரூ 16 கோடியை மருத்துவ மனை கட்டுமானத்திற்கு அளித்தது. 33 சதவீத படுக்கைகள், 40 சதவீத வெளிநோயாளிகளுக்கு இலவச மருத்துவம் என ஒப்பந்தம் போடப்பட்டது. 200 படுக்கைகள் இலவச சிகிச்சைக்காக ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் 1997 லிருந்து 2009 வரை ஒரு ஏழை கூட ஒப்பந்த அடிப்படையில் இலவச மருத்துவப் பயனை அனுபவிக்கவில்லை. இதுதான்பி.பி.பி யின் லட்சணத்திற்கு உதாரணம்.

மக்களின் பணம் தனியாருக்கு சூறையாடப் பட்டதற்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக் கடன்கள் ஓர் உதாரணம். மார்ச்,2013 ல் உள்ள மொத்த வராக் கடன் ரூ 1,64,461 கோடிகள். நான்கே நான்கு பெரும் தொழிலகங்கள் மட்டும் வைத்துள்ள பாக்கி ரூ 22,666 கோடி. 2007-2013 காலத்தில் வஜா செய்யப்பட்ட வராக்கடன் ரூ 1,41,000 கோடிகள். முதல் 30 வராக்கடன் கணக்குகளை ஒவ்வோர் வங்கிகளில் நேர் செய்தாலே பாலன்ஸ் ஷீட்டுகள் எல்லாம் நிமிர்ந்துவிடும் என்று சொல்வது யார் தெரியுமா! நம்ம சீமான் சிதம்பரம்அவர்கள்தான்.

நிலக்கரி , ஸ்பெக்ட்ரம், சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் காங்கிரஸ், பி.ஜே.பி, காங்கிரஸ் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. முறையான நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் 155 நிலக்கரி படுகைகள்  காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 186000 கோடி இழப்பு ஏற்பட்டது என்றால் பி.ஜே.பி காலத்திலும் 32 படுகைகள் இப்படித்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ராஜா ஸ்பெக்ட்ரத்தை 2001 விலைகளிலேயே 2005,2007,2008 ஆண்டுகளிலும் ஒதுக்கினார் என்பதே குற்றச்சாட்டு. பி.ஜே.பி யும் 2001 விலைகளிலேயே 2003 ல் ஸ்பெக்ட்ரத்தை விற்று ஊழலுக்கு "பிள்ளையார் சுழி" போட்டது. 

மாற்று என்ன !

சுதந்திர இந்தியாவில் இன்றுவரை யார் பொதுத்துறைக்கு பாதுகாவலாக இருந்துள்ளார்கள் என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. பொதுத்துறை பற்றி மிகத் தெளிவானஅணுகுமுறையையும் இடதுசாரிகள் வைத்துள்ளார்கள். சீமென்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்  தோழர் பி .ராமமூர்த்தி 80 களில் நடத்திய போராட்டம் பெல் நிறுவனத்தை பாதுகாத்தது. எல்.ஐ.சியை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதாவை கைவிடுகிற கடிதத்தை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி சி.பி.எம் கட்சியின் பின்னாளைய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுனில் மைத்ரா கரங்களில் தரவேண்டியிருந்தது. இவ்வாறு வரலாறு நெடுகிலும் இடது சாரிகளின் அரும்பணி பொதுத்துறையை பாதுகாத்ததற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. 

நவரத்தினங்களை விற்காதே; லாபமாக இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே; நட்டத்தில் ஓடினாலும் சமுக நோக்கில் இயங்குவதாக இருந்தால் அவற்றையும் விற்காதே;நட்டத்திலும் ஓடி, சமுக நோக்குடையதாகவும்  இல்லாது, மீட்சிக்கும் வழியில்லாவிட்டால், தொழிலாளருக்கு உரிய இழப்பீடோடு பங்குவிற்பனைக்கு போகலாம் என்பதே இடதுசாரிகள்முன்வைக்கிற மாற்று. இதைவிட தெளிவான அணுகுமுறை வேறு என்ன இருக்க முடியும்!

கேரளாவில் 2006-2011 வரை இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த காலத்தில் 32 மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இருந்து மீட்கப்பட்டன. அந்நிறுவனங்கள்ரூ 232 கோடி லாபம் ஈட்டின. 9 புதிய அரசு நிறுவனங்கள் துவக்கப்பட்டன. இப்படி சொல்லும் செயலும் ஒன்றாய் செயல்படுபவர்கள் இடதுசாரிகளே என்பதை காலம் உணர்த்தியுள்ளது.

இந்திய அரசியலில் ஒருமுறை கூட பதவிக்காகவோ, கார்ப்பரேட்டுகள் வீசுகிற தூண்டிலிலோ சிக்காமல் பொதுத்துறை காக்க உறுதியாக இருந்தவர்கள் இடதுசாரிகள். நாடாளுமன்றத்தில்ஒருமுறை கூட மக்களுக்கு எதிராக எந்த மசோதாவுக்காகவும் கை தூக்காதவர்கள். இடதுசாரிகளின் பலம் நாடாளுமன்றத்தில் பெருகுவதும் அவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கவேண்டிய அவசியத்தோடு ஒரு புதிய அரசு உருவாவதுமே பொதுத் துறையை, மக்கள் நலனை பாதுகாக்க உதவும். இதுவே வரலாற்றின் செய்தி. எனவே எது மாற்று என்றும்- யார் மாற்று என்பதும் தேர்தல் களத்தில் மக்கள் மத்தியில் சொல்லப்படவேண்டும்.    

Wednesday, February 5, 2014

Com M Girija, Jt secretary of AIIEA- felicitated by ICEU Madurai division- 1st feb 2014- Com G Aruna honoured her with a shawl- Com Girija's mother in the picture- Com G Meenakshisundaram President and Com P Mahalingam Jt secretary also seen in the photo

Sunday, January 26, 2014

GLIMPSES OF SUCCESSFUL 23RD CONFERENCE OF AIIEA

New General secretary Com V Ramesh- flanked by Com Amanullakhan and K Venugopal 

Com Chandrasekar Bose - Founder President of AIIEA addressing the session

Delegates session- Indepth discussions 


Com Sitaram Yechuri M.P- Inagural address

Photo: Com Girija from sziea.....is first women all inda office bearer of Aiiea .
PROUD MOMENT FOR SZIEF- Com M Girija elected as Joint secretary of AIIEA- First woman officebearer of AIIEA

Tuesday, January 7, 2014

வலிமையான பிரதமர்... விலைவாசியை என்ன செய்வார்!!


சுவாமிநாதன்

புலியின் பற்கள் வலிமையென
புள்ளி மான்கள் போற்றுவதில்லை !
பூனையின் பாய்ச்சலை
எலிகள் பாராட்டுவதில்லை!
பல்லி நகரும் லாவகத்தை
பூச்சிகள் கூட சிலாகிப்பதில்லை!
ஐந்தறிவின் உள்ளுணர்வுகளை
ஊடகங்கள் தீர்மானிப்பதில்லை!
தெரிகிறது யார் எதிரியென்று...
ஆனால்
ஏழாம், எட்டாம் அறிவும் ஏங்குகின்றன
வலிமையான பிரதமர் வேண்டுமென்று.......!!

 
இடையில் பயணத்தில் ஒரு நடுத்தர வேலைவாய்ப்பில் இருப்பவர் ஒருவரைச் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசியவுடன் வலிமையான பிரதமர் ஒருவர்தான் இன்றைக்கு நாட்டின் தேவை என்றார். அவரோடு ரொம்ப நேரம் உரையாடிய பிறகும் நான் நிற்கும் புள்ளியையும், அவர் நிற்கும் புள்ளியையும் இணைத்து ஒரு சின்னக் கோலம் கூடப் போட முடியவில்லை. ஒரு மணிநேரம் ஆன பிறகும் ஒரு சர்வாதிகாரிதான் நம்ம நாட்டுக்குப் பொருத்தமானவர் என்று அவர் கூறிய போது எதிரெதிரே அமர்ந்தாலும் ஏதோ ஒரு மைலுக்கு அப்பால் போய்விட்ட உணர்வு ஏற்பட்டது. ஆர்வத்தோடு அவருடைய முந்தைய அரசியல் சார்புகளை விசாரித்தபோது அன்னாஹசாரே, விஜயகாந்த், துக்ளக் சோ, எம்.எஸ். உதயமூர்த்தி என்று எங்கெங்கேயோ சுற்றி பின்னர்தான் அவர் நிற்கிற புள்ளி எனக்குத் தெரிந்தது. எதையோ தேடுகிற அவரது தவிப்பு புரிந்த பிறகு புள்ளிகள் நெருங்கி சிம்பிளான கோலம் ஒன்று வரைய முடிந்தது.

இந்திய அரசியலில் இரண்டே முகவர்கள்தான் ஊடகங்களின் கேமராக் கண்களுக்கு தெரிகின்றன. வலியவர் என்று குஜராத்காரரும், இளையவர் என்று குடும்ப வம்சத்து குல விளக்கும், மூன்றாவது ஃபிரேமிற்கு தேவையில்லாமல் இடித்துக் கொண்டு வீடுகளின் வரவேற்பறைகளில் காட்சியளிக்கிறார்கள். இது தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல. இரு துருவங்களாகக் காட்டப்படும் இரண்டு பேரை திரைக்குப் பின்னிருந்து இயக்குபவர்கள் வெவ்வேறானவர்கள் அல்ல என்பதுதான் அரசியல் சூட்சமம்.

இச் சூட்சமத்திற்கான முயற்சிகள் புதியவை அல்ல. 2004ல் இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஓர் மத்திய அரசு அமை வேண்டுமென்ற நிலையேற்பட்ட போது இந்தியப் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான இராகுல் பஜாஜ், காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய அரசு உருவாக வேண்டுமென்ற கருத்தை முன்மொழிந்தது நினைவில் இருக்கலாம். இந்தியாவின் பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அது தேசத்தின் நெருக்கடியாக சித்தரிப்பது அவர்களின் உத்தியில் ஒரு வகை. அவர்களின் பொருளாதார நலனுக்கு எதிரான மாற்று அரசியல் சற்றே துளிர்விடும் என்றாலும், அவர்கள் எல்லா ஆயுதங்களுடனும் களத்திற்கு வந்து விடுவார்கள். அப்படியொரு ஆயுதங்களில் ஒன்றுதான் எஜமானர்களின் குரலாக உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள்.

அணைக்காத கரங்கள்

ஒப்புதல் உற்பத்தி(Manufacture of consent ) என்பது பன்னாட்டு மூலதனத்தின், பெரும் தொழிலகங்களின் நலன்களைக் காக்கிற சாகசம். யாரைத் தாக்குகிறார்களோ அவர்களிடமிருந்தே தாக்குவதற்கான இசைவை பெற்றுக் கொள்வதே அதன் லாவகம். பழைய திரைப்படங்களில் மனைவியைக் கணவன் ஓங்கிக் கன்னத்தில் அறைந்தாலும் 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று மனைவியை அடுத்த காட்சியில் பாடவிடுவார்கள். இப்படிப்பட்ட 'ஒப்புதல் உற்பத்தி' தற்போது வலிமையான பிரதமர் வேண்டுமென்ற புதிய பாடலாக ஒலிக்கிறது.

2013டிசம்பரில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் பொருளாதாரப் பாதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கோபம், ஊழலின் மீதான வெறுப்பு ஆகியவையே காரணமென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. காங்கிரசுக்கு மாற்று வேறு எதுவும் கண்களுக்குத் தெரியாவிட்டால் பி.ஜே.பி, வேறு எதுவும் தெரிந்தால் காங்கிரஸ்-பிஜேபி-யைத் தாண்டி ஆம் ஆத்மி என்று தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. ஆகவே மக்கள் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். மாற்று எது என்பதே கேள்வி?

நாமும் வலிமையான பிரதமர் வேண்டுமென்று நினைக்கிறோம்! ஆனால், அது தனிநபர் வலிமையல்ல. கொள்கை வலிமை. மக்களுக்கான அரசியலை அமலாக்குகிற அரசியல் உறுதி. நாலரைக்கோடி சில்லரை வணிகர்களின் வாழ்க்கையைச் சூரையாட வருகிற வால் மார்ட்டைத் தடுக்கிற வலிமை உள்ளவரா! இந்திய மக்களின் சேமிப்புகளை விழுங்க நினைக்கிற பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டுகிற வலிமை உள்ளவரா! கொம்பைச் சிலுப்பி வரும் விலைவாசி உயர்வுக் காளையை அடக்கும் வலிமை உள்ளவரா! கார்ப்பரேட் ஊழல் பேய்களை ஓட்டுகிற வலிமை உள்ளவரா! இதையெல்லாம் பற்றிப் பேசாமல் வலிமை என்றால் எது யாரைப் பாதுகாப்பதற்கு...... யாரைத் தாக்குவதற்கு..... இதுதான் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி...!!

கசப்பான காலங்கள்

கடந்த காலத்தை சற்றுத் திரும்பிப் பாருங்கள்! 2004ல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தோடு 340 பிளஸ் சீட்டுகளைக் கைப்பற்றும் என்று ஊடகங்களின் ஆரவாரத்தோடு தேர்தலைச் சந்தித்த வாஜ்பாய் ஏன் தோற்றுப் போனார்!. 1998டில்லி, இராஜஸ்தானில், பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்தது ஏன்! 1998ல் டில்லி முதல்வராக இருந்த பி.ஜே.பி-யின் சுஸ்மா சுவராஜ் வெளிச்சந்தையில் வெங்காயம் ரூ50 க்கு விற்றபோது அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கிலோ ரூ11 க்கு விற்கிறேன் என்று சில இடங்களில் மட்டும் கடைவிரித்துக் கண் துடைப்பு செய்தும் ஏன் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சுஸ்மா சுவராஜ்-ன் தோல்விச் செய்தி வந்தவுடன் நல்ல பிள்ளையாக வெங்காயம் கிலோ ரூ10க்கு இறங்கி வந்தது தனிக் கதை.  

எனவே, பொருளாதாரப் பாதை மாறாமல் விலைவாசி குறையாது. விலைவாசி குறைந்து விட்டால் பெரிய பெரிய மனிதர்களின் கல்லாப் பெட்டி நிறையாது. வலியவரோ, இளையவரோ... இவர்கள் விலைவாசி குறைப்பதற்கு என்ன மந்திரம் வைத்திருக்கிறார்கள். நமோ...நமோ... என்று முணு முணுப்பதாலோ, தலைமுறை தலைமுறையாய் வறுமையே வெளியேறு! என்று குடும்பப் பாட்டு பாடுவதாலோ விலைவாசி குறையாது. காரணம் பணவீக்கம் என்பது சாதாரண மக்களின் கிழிஞ்சு தொங்கும் பைகளிலுள்ள கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் வசதி படைத்தவர்களின் மூட்டைகளுக்கு மாற்றுகிற ஏற்பாடாகும். மோடியும், மோடியின் மூதாதையர்களும் இதை எப்படிச் செய்தார்கள் என்று பார்ப்போம்.

1998ல் பி.ஜே.பி ஆட்சி இருந்த காலத்தில்தான் உணவுப் பொருட்கள் மீதான மொத்த விலைக் குறியீட்டெண் உச்சபட்சமாக இரண்டு இலக்க சதவிகிதமான 18சதத்தைத் தாண்டியது. காய்கறிகளின் விலைகள் 110சதவீதம், வெங்காய விலை 700 சதவீதம் என ஏறியது. 2000ம் ஆண்டில் அதே வாஜ்பாய் ஆட்சியில்தான் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ146ல் இருந்து ரூ 232க்கு ஏறியது. எரிபொருள், மின்சாரத்தின் விலைகள் 28சதவீதம் உயர்ந்ததென்பது 2001லிருந்து 2010 வரையிலான பத்தாண்டிலுங் கூட நடக்காத விலைவாசி உயர்வு, இதற்கெல்லாம் காரணம் பி.ஜே.பி அரசு  முன்னெடுத்த பொருளாதார முடிவுகள்தான். இன்று காங்கிரஸ் ஆட்சியில் விலை உயர்வுக்கு பிள்ளையார் சுழி (விலைவாசி விநாயகர் என்று சூடம் காண்பித்தாலும் காண்பிப்பார்கள்) போட்டவர்கள் மோடியின் மூதாதையர்கள்தான்.

நடிப்புச் சுதேசிகள்

ஒன்று, தாராளமான இறக்குமதியைக் கட்டவிழ்த்து விட்டது. 1991ல் இந்தியாவின் 3300 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் உண்டு. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சாலைகள் தோறும் சுதேசி சோப் எது? பிளேடு எது? என்று நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் ஏப்ரல்-1 2000ல் 714 பொருட்கள் மீதான இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நீக்கினார்கள். ஏப்ரல்-1, 2001ல் இன்னும் 715 பொருட்கள் மீதான அளவுக் கட்டுப்பாடுகளையும் நீக்கினார்கள். இதற்காக அவர்கள் தெரிவு செய்த தேதி மக்களைக் கேலி செய்வதற்கா என்று தெரியவில்லை. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்

உப்பென்றும், சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி!கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி

இரண்டாவது பெட்ரோலிய பொருட்கள் மீதான மையப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை(Administered Price Mechanism ) நீக்கிய புண்ணியவான்களும் இவர்கள்தான். 1989ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ8 ஆக இருந்தது. இன்று அது ரூ74க்கு உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு கிரின் சிக்னல் போட்டவர்கள் பி.ஜே.பி காரர்கள்தான்.15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச விலைகள் உயர்வைக் கணக்கிற் கொண்டு தானாகவே விலை மாறும் நடைமுறையைக் கொண்டு வந்தவர்கள். திருடிவிட்டு ஓடுபவனே திருடன்... திருடன்.. என்று கத்திக் கொண்டு ஓடுவது போல இன்று பெட்ரோல் விலை உயர்வுக்கு பி.ஜே.பி கண்ணீர் வடிப்பதும் நகைச்சுவைதான்.

மூன்றாவது, இறக்குமதி விலைச் சமன்பாடு (Import Price Parity ) என்ற நூதனமான விலை உயர்வை 2002ல் கண்டு பிடித்தவர்களும் இவர்கள்தான். இறக்குமதி ஆகாமல் உள்நாட்டில் உற்பத்தியாகிற பெட்ரோலுக்கும் இறக்குமதியானால் போடுகிற வரிகள், சரக்குக் கட்டணம், இன்சூரன்ஸ் என ஆகிய செலவுகளைச் சேர்த்து விலை நிர்ணயம் செய்த விபரீதத்தை அரங்கேற்றினார்கள். ஆகாத செலவுக்கு பில் போட்ட ஃப்ராடுத்தனத்தை எதற்காகச் செய்தார்கள் தெரியுமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்றதால் தனியார் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கூட ண்டாமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் தனியார் பங்குகள் எவ்வளவு பாருங்களேன். 

இந்தியன் ஆயில் காப்பரேசன்21 சதவீதம்
இந்துஸ்தான்  பெட்ராலியம்-49 சதவீதம்
பாரத் பெட்ரோலியம்-45 சதவீதம்
ஓ.என்.ஜி.சி-31 சதவீதம்
கெயில்-43 சதவீதம்
ஆயில் இந்தியா- 22 சதவீதம்

இவர்களின் லாப பங்கிற்காக அரசு காட்டிய கருணை இது. இது தவிர ரிலையன்ஸ் அம்பானி போன்றவர்களின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் லாபம் பெருக வேண்டாமா! ஆகாத செலவுக்கு பில் போட்டார்கள் வாஜ்பாயும், அத்வானியும்.பிள்ளையார் பக்தர்கள் அல்லவா! கடைத் தேங்காயை எடுத்துச் சிதறுகாய் போட்டார்கள்.

இப்படி அம்பானிக்கு கருணை காட்டிய இவர்கள் அப்பாவி விவசாயிகளுக்கு இறக்குமதி விலைச் சமன்பாட்டை கொண்டு வரமுடியுமா! பருத்தி சர்வதேசச் சந்தையில் ரூ 12000 விற்றபோது, இந்தியாவில் விவசாயிகளுக்கு ரூ 3000ம் தான் கிடைத்தது. அம்பானிக்கு வித்தியாசத்தை தந்தவர்கள், விவசாயிகளுக்கு வித்தியாசமாய் எதைத் தந்தார்கள் தெரியுமா! இரண்டு லட்சம் தூக்குக் கயிறுகள். இதில் ராமன், கணேசன், சர்தார், முபாரக், பீட்டர் என்று எந்த வித்தியாசமும் இல்லை.

நான்காவது, அத்தியாவசிய சரக்குகள் சட்டத்தை தளர்த்தி 50,000 டன்கள் வரை பெரும் வியாபாரிகள் பதுக்குவதை சட்டப் பூர்வமாக்கியதுதான். வாஜ்பாயின் வார்த்தைகளில் 'வியாபாரிகள் பதுக்குவது நமது நாட்டின் சட்டத்தின் படி குற்றமல்ல'. உளுந்தம் பருப்பு கிலோ ரூ 30ல் இருந்து ரூ 70க்கும், விளக்கெண்ணெய் ரூ 40ல் இருந்து ரூ80 க்கும், வெங்காயம் ரூ 4ல் இருந்து ரூ 60க்கும் ஏறியது. இந்த முடிவு எடுத்த பிறகுதான். சர்க்கரை போன்ற ரேசன் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டையும் தளர்த்தினார்கள்.

இதே வியாபாரிகளுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி வால்மார்ட்டுக்கு கண்ணசைவு காட்டுகிற அளவுக்கும் பிற்காலத்தில் போனது பி.ஜே.பி-யின் வளர்ச்சி என்பது வேறு கதை. எஜமானனை மாற்றாமல் வாலாட்டுகிற நன்றியுள்ள பிராணிகள் அல்ல முதலாளித்துவக் கட்சிகள். வளர்ச்சிக் கேற்ப வாலைக் குழைத்து ஆட்டப் பழகிக் கொண்டது பி.ஜே.பி.

ஐந்தாவது முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தை அமலாக்கியது பி.ஜே.பி தான். சரக்குகள் கைமாறாமலேயே வணிகம் நடந்தேறுவதும். அதன் மூலம் செயற்கையாய் விலை ஏறுகிற புதிய மோசடி அரங்கேறியதும் இவர்களின் காலத்தில்தான். இந்தியப் பட்ஜெட் தொகையைப் போன்று எட்டு மடங்கு, பத்து மடங்கு வரை முன்பேர வர்த்தகச் சந்தையின் நடவடிக்கை மதிப்புகள் போனதென்பது இச் சூதாட்டம் எவ்வளவு உச்சத்தைத் தொட்டதென்பதற்கு அடையாளம். பாரம்பரிய பதுக்கலையும் ஊக்குவித்து நவீன பதுக்கலுக்கும் வழிவகுத்த இவர்களின் அடுத்த அம்பும் சாமானியனின் வயிற்றை மிகச் சரியாகவே குறி வைத்தது.

ஆறாவது , பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக காப்புரிமைச் சட்டத்தை திருத்த முனைந்தது. ஜெர்மனியின் பேயர் நிறுவனம் இந்தியாவில் 2லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த கேன்சர் மருந்துகள் தற்போது ரூ 10,000 க்கும் ரூ20,000 க்கும் உள்நாட்டில் கிடைக்கிறது. பி.ஜே.பி கொண்டு வந்த காப்புரிமைச் சட்டத்திருத்தம் அப்படியே நிறைவேற்றப் பட்டிருந்தால் பரிதாப நோயாளிகள் பல லட்சங்களை இன்னும் செலவழிக்க வேண்டியது இருந்திருக்கும். இடதுசாரிகள் முன்மொழிந்து நிறைவேறிய திருத்தமே சாதாரண மக்களின் உயிர் வாழும் உரிமைகளைத் தக்க வைத்துள்ளது.


ஆள் மாறாட்டமல்ல தீர்வு

பி.ஜே.பி-யின் ஆறுமுகங்கள் மட்டுமே இவை. இன்னும் பல்லாயிரம் முகங்களைக் காட்டக் காத்திருக்கிறது பி.ஜே.பி. வலிமையான பிரதமர் இதையெல்லாம் மாற்றுவாரா! விலைவாசிக்கு கடிவாளம் போடுவாரா! உத்தரகாண்டு வெள்ளத்தில் 30,000 பேரை ஒரே நாளில் காப்பாற்றி அனுமார் போல கரை சேர்த்ததாகக் கதைவிட்டார்களே! கோடானு கோடி மக்களுக்கும் அது போன்ற கதைகளைத் தயார் செய்வார்களா!

பாதை மாறாமல் தீர்வுகள் இல்லை! தேசத்தின் தேவை வேறு பிரதமர்அல்ல. வேறு பாதை !

இரயில் பயணத்தில் என்னுடன் வந்தவர் விவாதம் எங்கெங்கோ திசைமாறி போய்க் கடைசியில் சொன்னார். "ஆமா சார்! உடம்புக்கு ஏதாவது வந்துவிடக்கூடாது என்று பதட்டமாக இருக்கிறது தனியார் மருத்துவமனைக்கு அழுதே வாழ்நாள் சேமிப்பெல்லாம் போய்விடும்" என்று... நானும் சொன்னேன் "தேசத்திற்கும் ஏதும் வரக்கூடாதது வந்து விடக் கூடாதே என்ற பயம் நமக்குத் தேவைப்படுகிறது" என்று....

நன்றி: 'இளைஞர் முழக்கம்'- ஜனவரி 2014